புதுடெல்லி: ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்த 26 வயது தலித் மாணவர் ரோகித் வெமுலா துன்புறுத்தலுக்கு ஆளாகி கடந்த 2016 ஜனவரி 17ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது 10வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ரோகித் வெமுலா மறைந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ‘இந்த நாட்டில் கனவு காணும் சம உரிமை அனைவருக்கும் உள்ளதா?’ என்ற வெமுலாவின் கேள்வி இன்னமும் நம் இதயங்களில் எதிரொலிக்கிறது.
வெமுலா படிக்க விரும்பினார், இந்த நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்காக அறிவியல், சமூகம், மனிதநேயத்தை புரிந்து கொள்ள விரும்பினார். ஆனால், இங்குள்ள அமைப்பால் தலித்தின் முன்னேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாதியவாதம், சமூகப் புறக்கணிப்பு, தினசரி அவமானம், மனிதாபிமானமற்ற நடத்தை ஆகியவைதான் நம்பிக்கைக்குரிய இளைஞனை அவரது கண்ணியத்தை பறித்து தனிமைப்படுத்தி மோசமான நிலைக்கு தள்ளிய விஷம். இன்று தலித் இளைஞர்களின் நிலை மாறிவிட்டதா? எதுவும் மாறவில்லை. இன்னமும் சாதிதான் மிகப்பெரிய சேர்க்கை படிவமாக உள்ளது.
கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு குற்றமாக மாற வேண்டும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எந்தவொரு மாணவரையும் சாதியின் அடிப்படையில் நசுக்கவும் , அமைதியாக்கவும், புறக்கணிக்கவும் உள்ள சுதந்திரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். தலித் இளைஞர்களே உங்கள் குரல்களை உயர்த்துங்கள். உங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள், ஒருவருக்கொருவர் துணையாக நில்லுங்கள். ரோகித் வெமுலா சட்டத்தை இப்போதே அமல்படுத்துங்கள். நமக்கு இப்போது பாகுபாடுக்கு எதிரான சட்டம் தேவை எனக் கேளுங்கள். கர்நாடகா, தெலங்கானா அரசுகள் இந்தச் சட்டத்தை கூடிய விரைவில் அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
