திருவனந்தபுரம்: இளம்பெண் பலாத்கார வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலுக்கு திருவல்லா நீதிமன்றம் ஜாமீன் மறுத்து உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ராகுல் மாங்கூட்டத்தில் மீது 3 இளம்பெண்கள் பலாத்கார புகார் கொடுத்தனர். இது தொடர்பாக அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் முதல் 2 வழக்குகளில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கனடாவில் வசிக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒரு இளம்பெண் அளித்த பலாத்கார புகாரில் ராகுல் மாங்கூட்டத்திலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரி திருவல்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருந்ததி திலீப், ராகுல் மாங்கூட்டத்திலின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
