செய்யாறில் பொங்கல் கொண்டாட்டத்தில் சோகம் ஏரியில் மீன் பிடித்தபோது தந்தை, 2 மகன்கள் பரிதாப பலி: சென்னையை சேர்ந்தவர்கள்

 

செய்யாறு: செய்யாறு அருகே மாட்டு பொங்கலையொட்டி ஏரியில் மீன் பிடிக்க சென்ற தந்தை, 2 மகன்கள் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா ராந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நாயன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(36). இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திவ்யபாரதி. இவர்களது மகன்கள் ராஜேஷ்(7), லத்தீஷ்(5). இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஊர் திரும்பிய தங்கராஜ், குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடினார்.

இந்நிலையில் நேற்று மாட்டுப்பொங்கலையொட்டி மீன்பிடிப்பதற்காக அங்குள்ள ஏரிக்கு தங்கராஜ் சென்றார். அவருடன் மகன்கள் இருவரும் சென்றனர். ஆனால் பல மணிநேரமாகியும் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மனைவி திவ்யபாரதி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து அங்குள்ள பகுதியில் தேடினார். இந்நிலையில் ஏரிப்பகுதிக்கு சென்று பார்த்தபோது கரையோரத்தில் தனது கணவர் மற்றும் மகன்களின் காலணிகள் கிடந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யபாரதியின் உறவினர்கள் ஏரியில் இறங்கி தேடியதில் 2 மகன்களின் சடலங்கள் கிடைத்தது. தகவலறிந்த தாசில்தார் தமிழ்மணி, மோரணம் போலீசார் சென்று பொதுமக்கள் உதவியுடன் தங்கராஜின் சடலத்தை மீட்டனர். விசாரணையில் மீன்பிடிக்க சென்ற தந்தை, மகன்களுக்கும் நீச்சல் தெரியாது, மீன்களை பிடிக்க முயன்றபோது சேற்றில் சிக்கி மூழ்கி அடுத்தடுத்து பலியாகி இருக்கலாம் என தெரிய வந்தது. இதையடுத்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: