மதுரை : பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 2,100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. திமிறிய மாடுகளின் திமிலை அடக்கிய வீரர்களுக்கு கார், டிராக்டர் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்டும். மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் நாளான நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஒரு சில காளைகள் மைதானத்தில் நின்று விளையாடி கெத்து காண்பித்தன. மருத்துவ மற்றும் உடல் தகுதி பரிசோதனைக்கு பின் 939 காளைகள் களமிறக்கப்பட்டன. 564 வீரர்களும் களமாடினர். போட்டி முடிவில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகன், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், அமைச்சர் பி.மூர்த்தி காரினை முதல் பரிசாக வழங்கினார். 2ம் பரிசாக 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி, டூவீலர் பரிசு பெற்றார்.
சிறந்த காளையாக அவனியாபுரம் விருமாண்டி சகோதரர்களின் மந்தை முத்துகருப்பன் மாடு தேர்வு செய்யப்பட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் டிராக்டர் பரிசை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். இரண்டாம் பரிசாக அவனியாபுரம் ஜி.ஆர்.கார்த்திக்கின் காளை தேர்வு செய்யப்பட்டு தங்கக்காசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 58 பேர் காயமடைந்தனர். பொங்கல் திருநாளின் தொடர்ச்சியாக மாட்டுப்பொங்கலான நேற்று மதுரை மாவட்டம், பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்றுத்திடலில் அமர்க்களமாக ஜல்லிக்கட்டு நடந்தது.
அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர். இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் வெங்கடேசன், பூமிநாதன், எஸ்பி அரவிந்த், டிஆர்ஓ அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வீரர்கள் 50 பேர் வீதம் ஒவ்வொரு சுற்றுக்கும் களமிறங்கினர். வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷத்துடன் வெளியேறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு அடக்கினர். மொத்தம் 465 வீரர்கள் களமிறங்கினர். 861 காளைகள் அவிழ்த்து விட்டதுடன் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மதுரை மாவட்டம் குலமங்கலம் வக்கீல் திருப்பதியின் காளை தேர்வு பெற்றது. இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான 2வது பரிசு பெற்ற கைக்குறிச்சி தமிழ்செல்வனுக்கு, கன்றுக்குட்டியுடன் நாட்டுப் பசுமாடு வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரராக 17 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம், பொந்துக்கம்பட்டியைச் சேர்ந்த அஜித் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கி 2வது பரிசு பெற்ற பொதும்புவை சேர்ந்த பிரபாகரனுக்கு டூவீலர் பரிசாக வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கி, 3ம் இடம் பிடித்த நாமக்கல் வீரர் கார்த்திக், டூவீலரை தட்டிச் சென்றார்.
இதுதவிர வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளுக்கும் தங்க மோதிரம், தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் மற்றும் பித்தளை அண்டா, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. 2,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண பார்வையாளர்களுக்கு கூடுதல் கேலரி வசதி செய்யப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்கள் 11 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 13 பேர், பார்வையாளர்கள் 13 பேர் என பாலமேட்டை சேர்ந்த பெண் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய காவலாளி உட்பட 37 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 8 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வை கண்டுகளிக்க ஆங்காங்கே எல்இடி திரை அமைக்கப்பட்டிருந்தது.
இதேபோல, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வெயில் தாக்காமல் இருக்க பசுமை மேற்கூரை மற்றும் தொட்டிகளில் குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, மாறி அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூர் பொதுமக்கள் பார்க்க தனி மேடையும், விவிஐபி, விஐபி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் அமர்ந்து பார்க்க தனிமேடையும் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டை காண அக்கம்பக்கம் கிராமத்தினரும், வெளிநாட்டினரும் வருகை தந்திருந்தனர்.
சூரியூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் கிராமத்தில், ரூ.3 கோடியில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்த மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 334 காளைகள் களம் இறங்கின. 334 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியை கலெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். போலீஸ் ஏட்டு உட்பட 61பேர் காயமடைந்தனர்.
விழாவில் 12 காளைகளை அடக்கிய பெரியசூரியூர் வீரர் மூர்த்திக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார், அமைச்சர் அன்பில் மகேஷ் சார்பில் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை விளாம்பட்டியை சேர்ந்த யோகேந்திரன் 11 காளைகளை பிடித்து 2வது பரிசாக இ-ஸ்கூட்டர் பெற்றார். மேலும் சைக்கிள், ட்ரெஸ்ஸிங் டேபிள், தங்க காசு, ரொக்க பரிசு ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை வெற்றி பெற்ற சிறப்பிடம் பிடித்தது. விழாவில் திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், எஸ்பி செல்வ நாகரத்தினம், மலேசிய எம்எல்ஏ குமரேசன், பாஜவை சேர்ந்த மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஒன்டிமுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முதல்சுற்று முடிவு வரை ரசித்தார் உதயநிதி
முதன்முறையாக வாடிவாசல் பகுதியில் மாடுபிடி வீரர்கள் காளையை அடக்கும் எண்ணிக்கையையும், சிறந்த காளைக்கான அறிவிப்பினையும் தெரிவிக்க டிஜிட்டல் அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றிலும் 2 முதல் 3 வரையிலும் காளைகளை அடக்கும் வீரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். காலை 9.30 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு நிகழ்வை தொடங்கி வைத்த பிறகு, போட்டிக்கான முதல் காளையாக இலங்கை மாகாண கவர்னராக இருந்த செந்தில் தொண்டைமான் காளை அவிழ்த்து விடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் ஜல்லிக்கட்டை உதயநிதி ஸ்டாலின் அமர்ந்து பார்வையிட்டு ரசித்து, பரிசுகள் வழங்கி, முதல்சுற்று நிறைவடைந்ததும் புறப்பட்டு சென்றார்.
பாரம்பரிய வழக்கப்படி காளைகளுக்கு மரியாதை
பாலமேட்டில் உள்ள பாதாள விநாயகர் ஆலயத்தில் மேளதாளம் முழங்க கிராம மரியாதை ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. கோயிலில் இருந்து பாரம்பரிய வழக்கப்படி ஜல்லிக்கட்டில் பழமையான முறையில் வழங்கப்பட்ட வேட்டி, துண்டு போன்றவற்றை மாலை மரியாதைகளுடன் ஊர்வலமாக ஜல்லிக்கட்டு வாடிவாசலுக்கு விழா கமிட்டி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கொண்டு வந்து சேர்த்தனர்.
துணை முதல்வருக்கு நடிகர் சூரி பரிசு
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் சூரி பார்த்து ரசித்தார். அவர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெண்கல காளை சிலையை பரிசாக வழங்கினார். நடிகர் சூரி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாலமேடு ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்துள்ளது. வீரர்களும் ஆர்வமுடன் காளைகளை அடக்கினர். நமது தமிழர்களின் அடயாளமான ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு பங்கேற்பது பெருமையாக உள்ளது. உயிரை பணயம் வைத்து வீரர்கள் காளைகளை அடக்குகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக செய்து வரும் அரசு, வீரர்களுக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்ட நலன்களையும் வழங்கும்’’ என்றார்.
ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க ஜீவா ஆசை
பாலமேடு ஜல்லிக்கட்டை நடிகர் ஜீவா படக்குழுவினருடன் வந்து பார்த்தார். ஜீவாவை பார்த்து மூதாட்டி ஒருவர் கோஷம் எழுப்பியதும், அவரது கன்னத்தை பிடித்து கொஞ்சினார். பின்னர் ஜீவா நிருபர்களிடம் கூறும்போது, ‘முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து வியந்து போயுள்ளேன். ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளது’’ என்றார்.
கார் பரிசாக வென்ற வாடகை கார் டிரைவர்
பாலமேடு ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கி, சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான அஜித்(22) நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எனது பெற்றோர் விவசாய கூலித் தொழிலாளர்கள். நான் 2வது மகன். வாடகை கார் ஓட்டி வருகிறேன். நாளொன்றுக்கு ரூ.600 சம்பளம் கிடைக்கும். இதுபோல பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து சிறு சிறு பரிசுகள் வாங்கியுள்ளேன். பிரபலமான பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்று, முதல் முறையாக கார் பரிசை வென்றுள்ளேன். இதுவரை வாடகை கார் ஓட்டி வந்த நான், இந்த கார் கைவசம் வரும்போது இதன் மூலம் நேரடி வருவாய் பெறும் கார் உரிமையாளராக மாறுவேன். ஜல்லிக்கட்டை மிகச்சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அரசுக்கு நன்றி’’ என்றார்.
ஏற்பாடுகள் சிறப்பு: தமிழக அரசுக்கு நன்றி நடிகர் அருண்பாண்டியன் நெகிழ்ச்சி
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் அருண் பாண்டியன், அவரது மகள் கீர்த்தி பாண்டியன், மருமகன் அசோக் செல்வன் ஆகியோர் குடும்பத்துடன் வந்து ரசித்துப் பார்த்தனர். பின்னர் அருண் பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘சிறு வயதிலேயே ஜல்லிக்கட்டை பார்த்திருக்கிறேன். இப்போது பாலமேட்டில் வந்து பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஜல்லிக்கட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த அரசு்க்கும், பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாருக்கும் நன்றி’’ என்றார்.
இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கென இன்று காலை 8 மணிக்கு சிறப்பு விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகிறார். காரில் அலங்காநல்லூர் சென்று, ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்டு, வெற்றி பெற்ற காளையர், காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். இதையொட்டி முதல்வர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள், சினிமா பிரபலங்கள், முக்கிய விஐபிகள் வருவார்கள். அனைவரும் அமர்ந்து பார்க்கும்விதத்தில் விஐபி பார்வையாளர் கேலரி, பொதுமக்கள் அமரக்கூடிய பார்வையாளர் கேலரி உள்ளிட்டவை வண்ணம் பூசி மின்னுகின்றன.
