நெய்வேலி: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டை பகுதியில் வசிப்பவர் ரமேஷ்(50). காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த தீபாவளியின்போது இவரது கடையில் வேலை செய்யும் ரஞ்சித்துக்கும், நெய்வேலியை அடுத்த பெருமாத்தூர் பிரபல ரவடி சுபாஸ்கர்(25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரஞ்சித்துக்கு ஆதரவாக ரமேஷ் தட்டிக் கேட்டதால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பொங்கலன்று டூவீலரில் குறிஞ்சிப்பாடி வந்த சுபாஸ்கர், காய்கறி கடையில் இருந்த ரமேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். அவரது அலறல் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவரவே சுபாஸ்கர் தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த ரமேஷ், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நெய்வேலி வட்டம்-30 முந்திரி தோப்பு பகுதியில் சுபாஸ்கர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குறிஞ்சிப்பாடி போலீசார் நேற்று அப்பகுதிக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று தோப்பில் நின்றிருந்ததை நோட்டமிட்ட போலீஸ்காரர்கள் வைத்தியநாதன், வெங்கடாசலம் ஆகியோர் அருகில் சென்றனர்.
அங்கு பதுங்கியிருந்த சுபாஸ்கரை பிடிக்க முயன்றனர். அப்போது 2 போலீஸ்காரர்களையும் சுபாஸ்கர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ரவுடி சுபாஸ்கரின் வலது காலில் சுட்டார். குண்டு காயம் பட்டு கீழே விழுந்த சுபாஸ்கரை போலீசார் மடக்கிப் பிடித்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ரவுடி சுபாஸ்கர் தாக்கியதில் காயமடைந்த போலீசார் இருவரும் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுட்டுப்பிடிக்கப்பட்ட சுபாஸ்கர் மீது நெய்வேலி, முத்தாண்டிக்குப்பம், ஊமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
