சென்னை விமானநிலையத்தில் புகைமூட்டம்; 14 விமானங்கள் ரத்து, 30 விமானங்கள் தாமதம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று போகி பண்டிகையை முன்னிட்டு கடும் புகைமூட்டத்துடன் பனி நிலவியது. இதன் காரணமாக, சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 7 மணி வரை வருகை, புறப்பாடு என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. தற்போது கொச்சி, பெங்களூர், மும்பைக்கு 3 புறப்பாடு விமானங்கள், அதேபோல் கொச்சி, பெங்களூர், மும்பையில் இருந்து 3 விமானங்களின் வருகை என மொத்தம் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து, சென்னை விமானநிலையத்தில் இதுவரை வருகை, புறப்பாடு என மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதேபோல், சென்னை விமானநிலையத்தில் இன்று காலை 7 மணிவரை 10 விமானங்களின் புறப்பாடு ஒரு மணி முதல் 3 மணி நேரம்வரை தாமதமானது. இதைத் தொடர்ந்து, தற்போது பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத், அகமதாபாத், கொழும்பு, புனே, கொல்கத்தா உள்பட 20 விமானங்களின் வருகை, அந்தமான், பெங்களூர், மும்பை, கோவை, திருவனந்தபுரம், ஐதராபாத், புனே, சிலிகுரி உள்பட 10 விமானங்களின் புறப்பாடு என மொத்தம் 30 விமானங்கள் கடும் பனியுடன் கூடிய புகைமூட்டம் காரணமாக, சுமார் 3 மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகியுள்ளன.

இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் கடும் பனியுடன் கூடிய புகைமூட்டத்தினால், சென்னை விமான நிலையத்தில் இதுவரை மொத்தம் 30 விமானங்கள் தாமதத்துடன், 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், சென்னை விமான நிலையத்தில் நடப்பாண்டு போகி பண்டிகை புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக மொத்தம் 44 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் எண்ணிக்கை, கடந்தாண்டைவிட அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: