பொங்கல் விழாவை முன்னிட்டு மாநகரில் 1,000 போலீசார் பாதுகாப்பு

*முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு; போதை பொருட்களை தடுக்க சிறப்பு குழு

கோவை : பொங்கல் விழாவை முன்னிட்டு மாநகர போலீசார் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வருகிற 15ம் தேதி பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு, கோவை மாநகரில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளில் அதிகளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, இன்று மாலை முதல் 18ம் தேதி வரை பொதுமக்களின் பாதுகாப்பு, சொத்துகளின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் குறைக்க மற்றும் விழாக்கள் சிறப்பாக நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மாநகரில் 15 முக்கிய இடங்களில் 24 மணி நேரமும், 60 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத ரீதியான 6 முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 24 மணி நேர கண்காணிப்பிற்கு 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் உள்ள 7 பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை ரயில் சந்திப்பு உட்பட 6 ரயில் நிலையங்களில் 40 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படும் செம்மொழிப் பூங்கா, உக்கடம் பெரியகுளம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா, முத்தண்ணன் குளம், வாளாங்குளம், குறிச்சி குளம், வ.உ.சி. பூங்கா, கொடிசியா, கரட்டுமேடு முருகன் கோயில் உள்ளிட்ட 9 சுற்றுலா மற்றும் கூட்டம் கூடும் இடங்களில் 110 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகரில் உள்ள 7 போலீஸ் சரகங்களில் நடைபெறும் விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை கண்காணிக்க, ஒவ்வொரு சரகத்திலும் 1 எஸ்.ஐ. மற்றும் 4 போலீசார் அடங்கிய 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒவ்வொரு சரகத்திலும், குற்றச்சம்பவங்களை தடுக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அதில் 7 சரகத்திற்கும் சேர்த்து 30 எஸ்.ஐ. மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கள், 60 போலீசார் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்களின் மேற்பார்வையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகர எல்லைகளில் 12 சோதனைச்சாவடிகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. கிராஸ் கட் ரோடு, ஒப்பனக்கார வீதி, பிக் பஜார் வீதி போன்ற வணிகப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டம் கூடும் இடங்களில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் நவீன கருவிகள் மூலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வாகன நிறுத்தங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் சோதனை மேற்கொள்வார்கள்.

பொங்கல் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் விழாவைக் கொண்டாட, மாநகர் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல போதை பொருட்களை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் முதல் முறையாக சைபர் கிரைம் போலீசார் குஜராத் வரை சென்று 10 பேரை கைது செய்து வந்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: