குழிபிறை, நச்சாந்துபட்டி பள்ளியில் 342 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

*அமைச்சர் ரகுபதி வழங்கினார்

திருமயம் : திருமயம் அருகே நடந்த நிகழ்ச்சியில் ரூ.16 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் 342 மாணவர்களுக்கு அமைச்சர் ரகுபதி விலை இல்லா சைக்கிள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மாணவர்கள் நலனுக்கும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும் பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இதில் தமிழ் புதல்வன், நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மகளிர் இலவச பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் கல்லூரி மாணவர்களுக்கு விலை உயர்ந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டமும் தற்போது செயல்படுத்தப்பட்டு மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலை இல்லா சைக்கிள் வழங்கும் திட்டம் அடிப்படையில் திருமயம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று திருமயம் அருகே உள்ள குழிபிறை ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் குழிபிறை மு.சித.ராம.ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மற்றும் நச்சாந்துபட்டி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்து ரூ.16 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் 342 விலை இல்லா சைக்கிளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்:

பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு காலதாமதம் இன்றி வருவதற்காகவும் சைக்கிளை பயன்படுத்தி வருவதால் உடற்பயிற்சியோடு மாணவர்கள் படிக்க கூடுதல் நேரம் கிடைக்கும் என கருதியே மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வர் யோசிச்சு யோசிச்சு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் செயல்படுத்து திட்டங்கள் போல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது இல்லை.

உங்கள் உறவினர்கள் வெளிமாநிலத்தில் இருந்தால் கேட்டுப்பாருங்கள் இதுபோன்ற திட்டங்கள் அங்கு உள்ளதா என்று. உலகத்தில் எந்த நாட்டிலும் இது போன்ற திட்டங்கள் அமலில் இல்லை. இந்தியாவில் எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட பிறகே மற்ற மாநிலங்களுக்கு செல்கிறது. புதுக்கோட்டையில் இருந்து நேற்று பள்ளி மாணவர்களுக்காக காலை, மாலை நேரம் 11 புதிய இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பேருந்துகள் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போதும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் சிரமம் இன்றி சென்றுவர பயன்படுகிறது. எனவே மாணவர்கள் இது போன்ற தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை பயன்படுத்தி நன்கு பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே தமிழ்நாடு முதல்வரின் தொலைநோக்கு பார்வை என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சிஇஓ சண்முகம், திருமயம் தாசில்தார் வரதராஜன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆர்எம்கே கருப்பையா, பள்ளி தாளாளர் மீனாட்சி சொக்கலிங்கம், கலை மற்றும் இலக்கிய அணி மேகநாதன், குழிபிறை முன்னாள் ஊராட்சி தலைவர் அழகப்பன், தலைமையாசிரியர் செல்வமணி, இளைஞர் அணி அருண்சேகர், விவசாய அணி சிவகுமார், தொழிலாளர் அணி ராராபுரம் அய்யாசாமி, தொண்டரணி சாமி சுரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: