செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்

 

காஞ்சிபுரம்: கோயில்களின் நகரம் காஞ்சிபுரத்தை இணைக்கும் வகையில் செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள காஞ்சிபுரம் தென் தமிழகத்தையும், வட இந்திய பகுதிகளையும் இணைக்கும் ரயில்வே இருப்புப்பாதையாக உள்ளது. இந்த வழித்தடத்தில் செங்கல்பட்டு, பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் முக்கிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். குறிப்பாக தென் சென்னை பகுதிகளான தாம்பரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்னை கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று வர காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை ரயில் சேவையை காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வடசென்னை பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர், பெரம்பூர் போன்ற பகுதிகளுக்குச் செல்ல அரக்கோணம் சென்று அங்கிருந்து வேறு போக்குவரத்து மூலம் சென்று வருகின்றனர். இத்தடம் ஒரு வழி ரயில் பாதையாக இருப்பதால் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஒரு வழியில் செல்லும்போது காஞ்சிபுரம், பாலூர் அல்லது வாலாஜாபாத் ரயில் நிலையங்களில் மற்றொரு ரயில் கிராசிங்-காக ரயில்கள் நிறுத்தப்படுகிறது. சிலசமயங்களில் 15 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுன்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கபடுகின்றனர். காஞ்சிபுரம் – செங்கல்பட்டு ரயில் பாதை ஒருவழி ரயில் பாதையாக உள்ளதால் காஞ்சிபுரதிலிருந்து சென்னை கடற்கரைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11.20 மணியிலிருந்து மாலை 5.50 மணி வரை சென்னை கடற்கரைக்கு புறநகர் ரயில் சேவை இல்லாததால் காஞ்சிபுரம், வாலாஜாபாத், பாலூர் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 2018ல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணத்தில் இருந்து மீண்டும் சென்னை கடற்கரை வழியாக இயக்கப்பட்ட 2 வட்டப்பாதை மின்சார ரயில்கள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து கோரிக்கை வைத்த போது, அரக்கோணம் – செங்கல்பட்டு ஒருவழி ரயில் பாதையாக உள்ளதால் வட்ட பாதை ரயில் இயக்க வாய்ப்பு இல்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்தது. காஞ்சிபுரம் புகழ்மிக்க கோயில் நகரமாகவும், பட்டு நகரமாகவும் விளங்குதால் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கு காஞ்சிபுரத்திற்கு வர போதிய நேரடியான தினசரி ரயில் போக்குவரத்து சேவை இல்லாததால் செங்கல்பட்டு அல்லது அரக்கோணம் வரை ரயிலில் வந்து அங்கிருந்து வேறு போக்குவரத்து மூலம் காஞ்சிபுரம் வந்தடைகின்றனர். அதேபோல் காஞ்சிபுரத்தைச் சுற்றி சுங்குவார்சத்திரம், பெரும்புதூர், ஒரகடம், மாங்கால் போன்ற பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அமைந்துள்ளதால் அங்கு பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வர காஞ்சிபுரத்திலிருந்து போதிய ரயில் சேவை இல்லாததால் வேறு போக்குவரத்து மூலம் அரக்கோணம் அல்லது செங்கல்பட்டுக்கு சென்று, அங்கிருந்து ரயில் பிடித்து சொந்த ஊருக்குச் செல்கின்றனர். அதேபோல் காஞ்சி வாழ்மக்களும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லச் செங்கல்பட்டு அல்லது அரக்கோணம் ரயில் நிலையங்களக்கு செல்ல வேண்டியுள்ளது.

மேலும் சென்னையின் பெருநகர எல்லை சமீபத்தில் 1,189 சதுர கிமீயில் இருந்து 5,904 சதுர கிமீயாக விரிவாக்கம் செய்யப்பட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களும், அரக்கோணம் வட்டமும் சென்னை பெருநகர எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டத்திலும் சென்னை பெருநகர எல்லைக்குள்ளும் சென்னை, ஆவடி, தாம்பரத்திற்கு அடுத்தபடியாக மாநகர் அந்தஸ்து பெற்ற கோயில் மற்றும் சுற்றுலா நகரமாக காஞ்சிபுரம் இருந்து வந்தாலும் கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு இல்லாமல் இன்னும் ஒரு வழி ரயில் பாதையாகவே இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் சென்னை ரயில்வே கோட்டத்தில் மற்ற ரயில் பாதைகள் 2,3 அல்லது 4 ரயில் பாதைகளாக இருந்து வரும்போது, செங்கல்பட்டு- காஞ்சிபுரம்- அரக்கோணம் ரயில் பாதைதான் ஒரு வழி ரயில் பாதையாக நெடுநாட்களாக இன்று வரை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெர்ரி அனுப்பியுள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரக்கோணம்- காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை திட்டத்தை துரிதப்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் புறநகர் ரயில்கள் மட்டுமில்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்க வாய்ப்பு ஏற்படும். தினமும் 13 ரயில்கள் இயக்கும் இடத்தில் 40 ரயில்கள் வரை விரிவுப்படுத்த முடியும். ஏற்கனவே காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையமும், வாலாஜாபாத் ரயில் நிலையமும் சரக்கு முனையங்களாக செயல்பட்டு வருவதால் சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்க வாய்ப்பு ஏற்படும். காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் புதிய சென்னை பன்னாட்டு விமான நிலைய பணிகள் நடைபெற்று வருவதால் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கு இரட்டை வழி ரயில் பாதை உறுதுணையாக இருக்கும்.

இதனால் இது அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருப்பதோடு தெற்கு ரயில்வேக்கு நல்ல வருவாய் கிடைக்கும். மேலும் செங்கல்பட்டு-பாலூர்-வாலாஜாபாத்- காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம், திருமால்பூர்- அரக்கோணம் ரயில் நிலையங்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஆண்டுதோறும் அதிகளவு வருமானமும் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் காஞ்சிபுரத்திற்கு கூடுதல் ரயில் சேவை கிடைக்காமல் உள்ளது. எனவே, இரட்டை ரயில் பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். புறநகர் ரயில் சேவை விரிவாக்கத்திற்கு இது ஒரு முக்கியமான படியாக இருக்கும்.

எனவே பொதுநலன் கருதி செங்கல்பட்டு-காஞ்சிபுரம் – அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு தேவையான உரிய நிதியை விரைவாக ஒதுக்கி பணிகளை துரிதமாக தொடங்க இந்திய ரயில்வே உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: