நெருங்கும் பொங்கல் பண்டிகை; பெரம்பலூர் மாவட்டத்தில் பூக்கள் விலை கடும் கிராக்கி: மல்லிகை, முல்லை முழம் ரூ.200க்கு விற்பனை

பெரம்பலூர்: பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பே மல்லிகை, முல்லை பூக்கள் விலை உயர்ந்து, முழம் ரூ.200க்கு விற்கப்படுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி, தை மாதத்தின் முதல் நாளில் சூரியப் பொங்கல், 16ம்தேதி மாட்டுப் பொங்கல், 17ம்தேதி காணும் பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தலைக்கு பூக்களை சூடி கொள்வதற்கு மட்டுமன்றி, பூஜைகளுக்கும், வீடு, வாகனங்ள், கால் நடைகளை அலங்கரிப்பதற்கும் பூக்களின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மங்கையர் விரும்புகின்ற மலர்களின் ராணி என புகழப்படும் மல்லிகைப் பூக்கள் சீசன் முடிந்துவிட்ட காரணத்தாலும், பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் ஏற்பட்ட உற்பத்தி குறைவு காரணமாகவும், ஏற்கனவே கிறிஸ்துமஸ் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை கருத்தில் கொண்டு கடந்த 3 வாரங்களாக முழம் ரூ.100 க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முதல் விலை இரட்டிப்பாகி முழம் ரூ.200க்கு விற்க தொடங்கியுள்ளது. மல்லிகையைப் போலவே சரிக்கு சமமாக முல்லைப் பூக்களும் முழம் ரூ.200க்கு விற்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக காக்கட்டான் பூக்கள், நந்தியா வட்டை, ஜாதிமல்லி என்ன பெண்கள் தலைக்கு சூடுகின்ற பூக்கள் முழம் ரூ.60 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.

பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால், பொங்கலன்று இன்னும் கனிசமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. சம்பங்கி பூ, செவ்வந்தி பூ, சாமந்திப் பூ ஆகியவற்றை வைத்து கட்டப் படும் கதம்பம் முழம் ரூ.50க்கும், உதிரிப்பூக்கள் பாக்கெட் ரூ.30க்கும் விற்கப்பட்டு வருகின்றன. இவையும் இன்னும் சில தினங்களில் உச்சத்தை தொடும் என எதிர் பார்க்கப்படுகிறது.இருந்தாலும் தமிழர்களின் பிரதான பண்டிகையை காரணம் காட்டி பூஜைகளுக்காகவும், அலங்காரத்திற்காகவும் பூக்களை வாங்கும் ஆர்வம் பொதுமக்களிடையே சற்றேதும் குறையாததால் பூக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

 

Related Stories: