கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை கவரும் ரோபோ நாய்

கூடுவாஞ்சேரி, ஜன.12: வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளும், இதேபோல் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று முன்தினம் முதல் 14ம் தேதி வரை 6 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் ஏற்கனவே வழக்கம்போல் இயக்கப்பட்டு வந்த 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக  1,415 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதில் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் இரவு முதல் அவரவர் சொந்த ஊர்களுக்கு முன்கூட்டியே படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்தநிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள ரோபோ நாய் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இரவு நேரத்தில் தங்கி வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்காக இரண்டு நாட்களுக்கு பேருந்து நிலையத்தின் உள்ளே ஆடல் பாடலுடன் இன்னிசை கச்சேரியும் நடைபெற்று வருகிறது. இதுவரை கடந்த 2 நாட்களில் 2.50 லட்சம் பேர் அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: