சென்னை: சென்னையில் 2ம் கட்டமாக 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நேற்று காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஏற்கனவே, ரயில் பாதை மற்றும் மின் இணைப்பு பணிகள் முடிந்து தயார் நிலையில் இருந்ததையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக மெட்ரோ ரயிலின் இன்ஜினை மட்டும் இயக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக முழு மெட்ரோ ரயிலையும் இயக்கி நேற்று சோதனை நடைபெற்றது. காலை 11.15 மணியளவில் 3 பெட்டிகளுடன் போரூரில் இருந்து புறப்பட்ட ரயில் மெதுவாக இயக்கப்பட்டு ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரை கடந்து சரியாக 12.30 மணியளவில் வடபழனி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தின் உறுதி மற்றும் சிக்னல் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் அர்ச்சுனன் (திட்டங்கள்), கிருஷ்ணமூர்த்தி (நிதி), மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் அளித்த பேட்டி: போரூர் – வடபழனி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு மைல் கல். கடந்த ஜூன் மாதத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது. வடபழனி அருகில் உள்ள முதற்கட்ட மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜூன் இறுதிக்குள் கோடம்பாக்கம் வரை ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி – வடபழனி இடையே வரும் பிப்ரவரி இரண்டாம் வாரம் பயணிகள் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். பூந்தமல்லி முதல் வடபழனி வரை 10 ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், பூந்தமல்லி முதல் போரூர் வரை 7 நிமிட இடைவெளியில் ஒரு ரயில் இயக்கப்படும். போரூர் முதல் வடபழனி வரை ரயில்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் குறைவாக இருக்கும் அதன்பிறகு படிப்படியாக உயர்த்தப்படும். தற்காலிகமாக தானியங்கி முறை பயன்படுத்துப்படுவதில்லை.
தற்போதைக்கு பணியாளர்கள் மூலம் சிக்னல் செயல்பாடுகளை கண்காணித்து ரயில்கள் இயக்கப்படும் மூன்று மாதத்திற்கு பிறகு தானியங்கி முறையில் ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். ஒட்டுமொத்தமாக இந்த 2ம் கட்ட மெட்ரோ திட்டம் முழுமையாக பணிகள் 2028ம் ஆண்டில் தான் நிறைவு பெறும். கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
கோவை,மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்று மத்திய அரசின் கேள்விகளுக்கு கூடுதல் விளக்கங்கள் உடன் அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மதுரை,கோவை மெட்ரோ திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு இதுவரை நிறுத்தவில்லை. ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறும் வரை அவர்களின் கேள்விகளுக்கு தேவையான விளக்கங்களை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
