×

குளிர் காற்றும் வீசும் புதிய காற்று சுழற்சி உருவானது: 7 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: இலங்கை அருகே நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து கரை கடந்தது. இந்நிலையில், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால், தமிழகத்தில் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். மேலும், கிழக்கு திசை காற்றின் காரணமாக கடும் குளிர் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக இருந்ததை அடுத்து தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகபட்டினத்தில் நேற்று 90மிமீ மழை பெய்துள்ளது. வேதாரண்யம் 50மிமீ, திருநெல்வேலி, பேராவூணி, கோடியக்கரை, தலைஞாயிறு 40மிமீ, பெய்துள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இருப்பினும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்தும் காணப்பட்டது. குறிப்பாக திண்டுக்கல், திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வட கிழக்கு இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலலை கொண்டு இருந்த கற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து வட கிழக்கு இலங்கையின் வட கிழக்கு கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 4 மணி அளவில் இலங்கையின் முல்லைத்தீவு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது.

பின்னர், வடக்கு இலங்கை மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் நன்கமைந்த குறைந்த காற்றழுத்தப் பகுதியாக நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வலுவிழந்தது. அதன் தொடர்ச்சியாக தெற்கு கடலோர த மிழகம் மற்றும் அதை ஒட்டிய வளைகுடாவில் மேலும் அந்த காற்றழுத்தம் வலுவிழந்தது. இதற்கிடையே, மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒரு வளி மண்டல காற்று சுழற்சி புதியதாக உருவாகியுள்ளது.

அது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 3.1 கிமீ உயரம் வரையில் நீண்டுள்ளது. அதன் காரணமாக கிழக்கு திசையில் இருந்து கடல் காற்றை மேற்கு நோக்கி இழுக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த குளிர் காற்று நேற்று வீசியது. வட கடலோரப் பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே கடும் குளிர் காற்று வீசியது.

தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழையும் பெய்தது. மதியம் மற்றும் மாலை நேரங்களில் உள் மாவட்டங்களில் மழை பெய்தது. கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி குளிர் காற்று வளி மண்டல சுழற்சிக்கு செல்வதால் மேற்கு பகுதியில் உள்ள மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்ட மலைப்பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்தது.

அதன் தொடர்்ச்சியாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

* நடுக்கும் குளிர் ஏன்?
இலங்கை அருகே கடந்த 2 நாட்களாக நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. அதற்கு பிறகு மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக அந்த காற்று சுழற்சி கிழக்கு திசையில் இருந்து கடல் காற்று இழுக்கத் தொடங்கியுள்ளது.

மேலும், கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி கடல் காற்று குளிர்ந்த காற்றாக செல்வதால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் தொடங்கி உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் இருந்தே ஈரப்பதத்துடன் கூடிய குளிர் காற்று வீசியது.

அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் மூடுபனியும் நிலவியதால், கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கினர். கிழக்கு திசை காற்று தொடர்ந்து வீசி வருவதால் இன்றும் கடும் குளிர் காற்று வீசும். பனிப் பொழிவும் இருக்கும்.

Tags : Chennai ,Sri Lanka ,southeast Arabian Sea ,Tamil Nadu ,Cuddalore ,Ariyalur ,Mayiladuthurai ,Nagapattinam ,Thiruvarur ,Thanjavur ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...