கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், முக்கிய சுற்றுலா தலங்களாக பில்லர் ராக், குணா குகை, பைன் மர சோலை, மோயர் சதுக்கம் உள்ளிட்டவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், அவற்றின் பணமாக நுழைவு பகுதியில் கட்டணம் செலுத்தி வந்தனர்.
பெரியவர்களுக்கு ரூ.30 சிறியவர்களுக்கு ரூ.20 மற்றும் வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், இந்த பகுதிகளை பார்வையிடுவதற்கான கட்டணம் மற்றும் வாகன கட்டணம் ஆகியற்றை, இன்று (ஜன. 12) முதல் கியூஆர் கோடு வாயிலாக செலுத்த வேண்டும். இதற்கு செல்போன் சிக்னல் கிடைக்கும் இடமான பசுமை பள்ளத்தாக்கு அருகே, கட்டணம் செலுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பிறகு வனப்பணியாளர்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளும், வாகனங்களும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என, வனத்துறை அறிவித்துள்ளது.
