கூட்டணிக்கு தலைமை நாங்கதான்… ஜெயிச்சது நாங்கதான்… மொடக்குறிச்சிக்கு அதிமுக-பாஜ டிஸ்யூம்…டிஸ்யூம், உள்ளடி வேலையில் இறங்கும் ‘தாமரை, இலை’

ஈரோடு: மொடக்குறிச்சி தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க மேலிடம் அடம் பிடிக்கிறது. ஆனால், அதே தொகுதியை மீண்டும் சிட்டிங் பாஜ எம்எல்ஏ தக்க வைத்துக்கொள்ள காய் நகர்த்துவதால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில், மொடக்குறிச்சி தொகுதியில், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ஜ சார்பில் சரஸ்வதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தே.ஜ. கூட்டணியில் அதிமுக தலைமையில் பாஜ, பாமக (அ), தமாகா உள்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ன. இந்நிலையில், மொடக்குறிச்சி தொகுதியை கடந்த தேர்தலை போலவே கூட்டணியில் உள்ள பாஜ.வுக்கு ஒதுக்காமல் அதிமுக.வுக்கு ஒதுக்ககோரி அந்த தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.பி., செல்வக்குமாரசின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதேநேரத்தில், தற்போது மொடக்குறிச்சி தொகுதியில் பாஜ சிட்டிங் எம்எல்ஏ.வாக உள்ள சரஸ்வதி, அதே தொகுதியில் போட்டியிட பாஜ தலைமை மூலமாக செல்வாக்கை பயன்படுத்தி காய் நகர்த்தி வருகிறார்.

ஆனால், அதிமுக நிர்வாகிகளோ, ‘‘நாங்கள்தான் கூட்டணிக்கு தலைமை, நாங்கள் சொல்வதுதான் முடிவு. இம்முறை மொடக்குறிச்சி தொகுதி எங்களுக்குத்தான்..’’ என மார்தட்டுகின்றனர். இத்தொகுதியை அதிமுகவும், பாஜ.வும் கேட்டு அடம்பிடித்து வருவதால், அதிமுக தலைமை கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது சொந்த கட்சியினர் கருத்தை கேட்பதா? என்ற குழப்பத்தில் உள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மொடக்குறிச்சி தொகுதியை கடந்த தேர்தலில் கூட்டணியில் உள்ள பா.ஜ.வுக்கு கொடுத்தோம். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் பாஜ.வுக்கு கொடுத்தால், இங்கு அதிமுக.வினர் சோர்ந்து போய்விடுவார்கள். இங்கு, பாஜ.வினர் மட்டும்தான் வெளியே தெரிவார்கள். கடந்த முறை கொடுத்த தொகுதியை தவிர்த்து, புதிய தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கினால்தான் நன்றாக இருக்கும்.

அதிமுக.வுக்கு மொடக்குறிச்சி தொகுதியை ஒதுக்கக்கோரி மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’’ என்றனர். பா.ஜ நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இது, நாங்கள் ஜெயித்த தொகுதி. இதை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம். இத்தொகுதியில் மீண்டும் நாங்கள்தான் போட்டியிட உள்ளோம். ஏனென்றால், அதே தொகுதியில் எங்களது கட்சி சார்பிலும், கூட்டணி சார்பிலும் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி உள்ளோம். இதனால், நாங்கள் வெற்றிபெற்ற தொகுதியில் மீண்டும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இத்தொகுதியில், நாங்கள் களப்பணியாற்றுவது எளிது. இதை, கட்சியின் மேலிடத்தில் தெரியப்படுத்தி உள்ளோம்’’ என்றனர். ஒரு தொகுதிக்கு இரண்டு கட்சி நிர்வாகிகளும் மல்லுக்கட்டி வரும் நிலையில், இரண்டு கட்சியில் எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் இந்த முறை நிச்சயம் உள்ளடி வேலைகள் நடக்கும் என்பது மட்டும் நிச்சயம் என்கின்றனர் இலைக்கட்சியின் சீனியர்கள்.

* வாரிசுக்கு வாய்ப்பு
மொடக்குறிச்சி தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ சரஸ்வதி இந்த முறை போட்டியிட வாய்ப்பு குறைவு என்றும் அதற்கு பதிலாக தன்னுடைய மகளை போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளை கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. எனவே, எப்படியாவது தன்னுடைய மகளுக்கு சீட் வாங்கி கொடுத்துவிடுவார் என்றும், இதற்கு கட்சியின் மாநில தலைமையும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

*ஊட்டிக்கு நடக்கும் சண்டை
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் பிடிக்க எப்போதும் அனைத்து கட்சிகளிலும் போட்டிகள் நிலவும். குறிப்பாக, அதிமுக, பாஜ கூட்டணி கட்சிகளிடையே எப்போதுமே ஊட்டி தொகுதியை பிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இம்முறையும் இந்த தொகுதியை பிடிக்க, இரு கட்சிகளும் தங்களது கட்சி தலைமையிடம் கேட்டு அடம் பிடித்து வருகிறார்கள்.

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின்போது, இந்த தொகுதியில் அதிமுக சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் போட்டியிட்டார். ஆனால், அவர் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷிடம் தோல்வியை தழுவினார். கடந்த 2021ம் ஆண்டு பா.ஜ அடம் பிடித்து இந்த தொகுதியை வாங்கியது. குன்னூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் போஜராஜ் என்பவர் போட்டியிட்டார்.

ஆனால், அவரும் மண்ணை கவ்வினார். மீண்டும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கணேசன் வெற்றி பெற்றார். கடந்த இரு தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜ தோல்வி அடைந்த நிலையில், இம்முறை இரு கட்சிகளும் இத்தொகுதியை கேட்டு, தங்களது கட்சி தலைமையிடம் மல்லுக்கட்டுகின்றன. அதிமுக நிர்வாகிகள் எங்களுக்குத்தான் சீட் என கூறி வருகின்றனர். பாஜ நிர்வாகிகள் நாங்கள் விடப்போவதில்லை எனக்கூறி வருகின்றனர். இதனால், ஊட்டி தொகுதி அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.

Related Stories: