கடலூர்: யாருடன் தேமுதிக கூட்டணி என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பிரேமலதா தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடக்கும் தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. வேப்பூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்; விஜயகாந்துக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது கடலூர் மாவட்டம் விருத்தாசலம்தான். கடலூர் மாவட்டம் எப்போதும் விஜயகாந்தின் கோட்டை.
ரசிகர் மன்றமாக தொடங்கி இன்று தேமுதிகவாக மாறியுள்ளது நமது இயக்கம்; தேமுதிக தொண்டர்கள் ஒவ்வொருவரிடம் கேப்டன் விஜயகாந்த்தை பார்க்கிறேன்; அவரின்றி நாம் இல்லை. காசு கொடுக்காமல் தேமுதிக மாநாட்டிற்கு தொண்டர்கள் வந்துள்ளனர்; இதற்கு இணை எக்கட்சியும் இல்லை. நாட்டிற்கு உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் கட்சி தேமுதிக. மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே கூட்டணி இறுதி செய்யப்படும். தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. வெற்றி ஒன்றுதான் தற்போது தேமுதிகவின் கொள்கை.
தேமுதிகவை பயன்படுத்தி வெற்றிபெற்றவர்கள் எங்களுக்கு வாய்ப்பு தருவதில்லை. யாருடன் தேமுதிக கூட்டணி என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக மாவட்ட செயலர்கள் கருத்துகளை படித்து அதன்படி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தெளிவாக சிந்தித்து ஒரு மகத்தான கூட்டணியை விரைவில் அறிவிப்போம் என்று கூறினார்.
