தமிழக சட்டப்பேரவை தேர்தலில்; அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது: எடப்பாடி நேரடியாக கேள்விகள் கேட்டார்

 

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணலை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, கேள்விகளை கேட்டார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்துக்கட்சிகளும் வேகப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக கட்சி நிர்வாகிகளுக்கு பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், அதிமுக சார்பில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி 2 வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மட்டும் 2,187 விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர்.

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் 9ம் ேததி (இன்று) முதல் 13ம் தேதி வரை காலை, மாலை என தனித்தனியாக நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு சேலம் மாநகர், அதைத்தொடர்ந்து சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணலை தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணியில் இருந்து நாமக்கல், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதியில் உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் பங்கேற்பதற்கு விருப்ப மனு அளித்தவர்கள், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் கொண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நேர்காணலில் பங்கேற்ற அதிமுகவினரிடம் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார். அதன்படி, அதிமுகவில் எத்தனை ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருக்கிறீர்கள், அதிமுக நடத்திய என்னென்ன போராட்டங்களில் பங்கேற்றுள்ளீர்கள், உங்கள் தொகுதியில் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது? நீங்கள் கேட்ட தொகுதி ஒதுக்கப்பட்டால் எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள்? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

Related Stories: