சிவகாசி, ஜன. 10: சிவகாசி அருகே பழைய இரும்புக்கடையில் புகுந்த திருடன் கல்லாவில் ஹாயாக அமர்ந்து பணம் திருடும் வீடியோ வைரலாகி வருகிறது. சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்த துரைராஜ் (41) என்பவர் ஐயப்பன் கோயில் அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு திருச்செந்தூர் சென்றவர், மறுநாள் காலை வந்து பார்த்தார்.
அப்போது கடை திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையிலிருந்த செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருடனை தேடி வந்தனர்.
அப்போது சிசிடிவி கேமராவில் திருடன் ஒருவன் கல்லா இருக்கையில் ஹாயாக அமர்ந்து பணம், செல்போனை திருடும் காட்சி இருந்தது. திருட்டில் ஈடுபட்டது சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்த குருசாமி (21) என தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிவகாசி டவுன் போலீசார் குருசாமியை கைது செய்தனர்.
