மதுரை, ஜன. 10: மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த பொங்கல் விழா கயிறு இழுக்கும் போட்டியில் நீதிபதிகள் அணி வெற்றி பெற்றது. மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக பொங்கல் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பி.வடமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவரை முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், தலைமை குற்றவியல் நீதிபதி செல்வபாண்டி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடையே கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் நீதிபதிகள் அணி வெற்றி பெற்றது. மேலும் விழாவில் சேவல் சண்டை, பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் ஐகோர்ட் நீதிபதி வடமலை வழங்கினார். விழாவில் பாரம்பரியமான பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நடந்தது. மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் மோகன்குமார் ஆகியோர் தலைமையில் போட்டிகள் நடத்தப்பட்டது. பார் கவுன்சில் உறுப்பினர் அசோக், பொருளாளர் ராஜமோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
