குழிப்பாந்தண்டலம் நெடுஞ்சாலையில் பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம், ஜன.9: மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலை முக்கிய சாலையாகும். எப்போதுமே, அதிகப்படியான வாகனங்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் இச்சாலை, மிகவும் குறுகியதாக உள்ளதாலும், அதிகப்படியான வளைவுகளை கொண்டுள்ளதாலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இந்நிலையில், சாலை விபத்துகளை குறைக்கும் வகையிலும், வாகனங்கள் விரைவாக சென்று சேரும் வகையிலும், எச்சூர் முதல் நந்திமா நகர் வரை 5 கி.மீ தூரத்திற்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் தலா 5 அடி விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது. இதற்காக, குழிப்பாந்தண்டலம் பகுதியில் 2 சிறிய பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், சாலையின் ஒருபுறம் மட்டும் வாகனங்கள் உரசிக்கொண்டு சென்று வருகிறது. அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இரவு நேங்களில் விபத்துகளும் நடக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: