வீட்டில் டிவி பார்க்கும்போது தகராறு: 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை; வாலிபர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி செய்யது கரீம் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் லட்சுமணன் (16). இவர் அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அவ்வப்போது அவரது வீட்டருகேயுள்ள சபரிராஜன் (23) வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதியன்று வீட்டில் சபரிராஜன் தனியாக இருந்தார். அப்போது அங்கு வழக்கம் போல் டிவி பார்ப்பதற்கு லட்சுமணன் வந்தார். அங்கு டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது சபரிராஜனுக்கும், லட்சுமணனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சபரிராஜன் அரிவாளால் லட்சுமணனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயத்துடன் லட்சுமணன் அலறினார். இவரது சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லட்சுமணனை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் சபரிராஜனை பிடித்து பணகுடி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சபரிராஜனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் லட்சுமணன் இன்று அதிகாலையில் இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி சபரிராஜன் மீதான கொலை முயற்சி வழக்கினை கொலை வழக்காக மாற்றினர்.

Related Stories: