சொந்த தொழில் வைத்து தருவதாக பலரிடம் ரூ.2.75 கோடி மோசடி * பணத்தை திருப்பி கேட்ட நண்பன் கடத்தல் * ஓடும் காரில் இருந்து வெளியே வீசினர் பள்ளிகொண்டா அருகே பரபரப்பு

ஒடுகத்தூர், ஜன.7: பள்ளிகொண்டா அருகே தொழில் வைத்து கொடுப்பதாக கூறி பலரிடம் ரூ.2.75 கோடி மோசடி செய்துள்ளனர். பணத்தை திருப்பி கேட்ட நண்பனை காரில் இருந்து வெளியே வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த முனீர் என்பவரின் மகன் அப்துல் ரகுமான்(23). இவர் தனது தந்தைக்கு உதவியாக எலக்ட்ரீஷியன் பொருட்கள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரும் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த காதர் பாஷா என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு காதர் பாஷா, தனது நண்பரான அப்துல் ரகுமானிடம் சென்று, உனக்கு தனியாக லெதர் கம்பெனி, துணிக்கடை வைத்து கொடுக்கிேறன் என ஆசை வார்த்தை கூறினார். இதற்காக அவரிடம் சுமார் ரூ.45 லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார்.

இதேபோல், அதே பகுதியை சேர்ந்த வாகித், சாருக், உமர், முகமது அலி, வசிம் ஆகியோரிடமும் தொழில் வைத்து கொடுப்பதாக காதர் பாஷா சுமார் ரூ.2.75 கோடியை பெற்றுள்ளார். ஆனால், காதர் பாஷா யாருக்கும் எந்த தொழிலையும் வைத்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பணம் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் காதர் பாஷா யாருக்கும் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதற்கிடையே பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் காதர் பாஷா தலைமறைவாகினார். இந்நிலையில் நேற்று பள்ளிகொண்டா பகுதியில் காதர் பாஷா காரில் சுற்றி கொண்டு இருப்பதாக அப்துல் ரகுமானுக்கு தகவல் கிடைத்ததாம்.

அதனடிப்படையில் அப்துல் ரகுமான் பள்ளிகொண்டா பகுதிக்கு சென்று, காரில் சுற்றிக் கொண்டிருந்த காதர் பாஷாவை மடக்கி பிடித்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது, காதர் பாஷா பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி அப்துல் ரகுமானை தனது காரில் பசுமாத்தூர் வழியாக கடத்திச் சென்றார். அப்போது காரில் காதர் பாஷா, மற்றும் அவரது கூட்டாளிகளான மொய்தின் அலி, நிசார் அகமத், தப்ரேஸ் ஆகியோர் சேர்ந்து, அப்துல் ரகுமானிடம் ‘நீ கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்று கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், காரை நிறுத்தாமல் அப்துல் ரகுமானை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளி விட்டு அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினார்களாம். கீழே விழுந்த அப்துல் ரகுமானுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் அப்துல் ரகுமான் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: