உத்தரப் பிரதேசம்: கோரக்பூரில் இருந்து மும்பை லோகமான்ய திலக் முனையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலால், உத்தரப் பிரதேச மாநிலம் மவு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் முழுமையாக காலியாக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இன்று காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, ரயில் மவு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும், பாதுகாப்பு முகமைகள் உடனடியாக உஷார்படுத்தப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்கள் அனைவரும் ரயிலில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜி.ஆர்.பி மற்றும் ஆர்.பி.எஃப் வீரர்கள் இணைந்து பயணிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு, ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திடீரென ரயில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டதால் பயணிகள் இடையே ஒருவித அச்சமும் பதற்றமும் நிலவியது. எனினும், ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்டு, பயணிகளை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், சற்று நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியா அல்லது உண்மை ஏதும் இருக்கிறதா என்பது தெரியவரும். முழுமையான சோதனைகளுக்குப் பிறகே ரயில் மீண்டும் மும்பை நோக்கிப் புறப்பட அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
