கணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்று இளம்பெண் தற்கொலை

 

தேனி: கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இளம்பெண், 2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்று, தானும் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள தண்டியன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு நீதி (7), தேவா (5) என இரண்டு மகன்கள். இந்நிலையில், ஜெயபெருமாள் தினசரி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். குடியை நிறுத்தும்படி மனைவி கண்டித்தும், அவர் குடியை நிறுத்தாமல் குடும்பத்துடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், தனலட்சுமி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு ஜெயபெருமாள் மீண்டும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால், தனலட்சுமி தற்கொலை செய்ய முடிவு செய்தார். இன்று அதிகாலை 2 மணியளவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 மகன்களையும் தூக்கிக்கொண்டு தண்டியன்குளம் ஓடைப்பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் முதலில் 2 மகன்களையும் தள்ளிவிட்டு, பின்னர் தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அந்த வழியாகச் சென்ற கிராமத்தினர் கிணற்றில் தனலட்சுமியும், அவரது மூத்த பையன் நீதி ஆகியோர் தண்ணீரில் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வருசநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தனலட்சுமி, நீதி ஆகியோரின் உடல்களை மீட்டனர். மற்றொரு சிறுவன் தேவா உடலை தேடி வருகின்றனர்.

Related Stories: