தென்காசி: கழுகுமலை அருகே இளம்பெண் கொலையில் போலீசில் சிக்கிய காதலன், ‘‘இன்ஸ்ட்ராகிராமில்’’ வேறொருவருடன் தொடர்பில் இருந்ததால் கோபத்தில் கழுத்தை நெரித்ததில் இறந்துவிட்டாள் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்த பால் வியாபாரி வெள்ளைச்சாமி மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். அப்போது அதே பள்ளியில் படித்த தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, கொளக்காட்டான்குறிச்சியைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் ராஜேசுக்கும் (25) காதல் ஏற்பட்டது. இடையில் இருவருக்கும் தகராறு ஏற்படவே பேசாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காவலர் பள்ளியில் பயிற்சி கட்டணம் செலுத்த வந்த உமாவை ெதாடர்பு கொண்ட காதலர் ராஜேஷ் அவருடன் சமாதானம் பேசியுள்ளார். பின்னர் மாலையில் உமாவை பைக்கில் கஸ்தூரிரெங்கபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பைக்கில் ராஜேஷ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்படவே, உமாவை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். இதில் உமா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அருகில் உள்ள வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்ற ராஜேஷ், அங்கு விவரங்களைக் கூறி சரண் அடைந்தார். இதையடுத்து வெம்பக் கோட்டை போலீசார் கழுகுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவரை ஒப்படைத்தனர்.
கழுகுமலை போலீசார் ராஜேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசில் ராஜேஷ் அளித்த வாக்குமூலம்:-தென்காசி மாவட்டம், பாறைப்பட்டி காவலர் பயிற்சி பள்ளியில் படித்த உமாவும், நானும் கடந்த 8 மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்ேதாம். இடையில் அவள் ‘இன்ஸ்ட்ராகிராமில்’ அடிக்கடி வேறொருவருடன் தொடர்பில் இருந்ததால் எனக்கும், அவளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்தோம். நேற்று பயிற்சி பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த உமா வந்துள்ளதாக கேள்விப்பட்டு அவரை போனில் தொடர்பு கொண்டேன். நேரில் வருவதாகக் கூறி பயிற்சி பள்ளிக்கு சென்றேன். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.
பின்னர் மனம் விட்டு பேசுவதற்காக அவளை கஸ்தூரிரெங்கபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ‘இன்ஸ்ட்ராகிராமில்’ அவள் வேறொருவருடன் பேசியது குறித்து கேட்டேன். இதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், கோபத்தில் அவளது கழுத்தை நெரித்தேன். அவள் மயங்கி விழுந்தாள். உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஏற்பாடு செய்தேன். அங்கு அவள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவளை கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. கோபத்தில் கழுத்தை நெரித்ததில் அவள் இறந்து விட்டாள். ஆத்திரத்தில் தவறு செய்து விட்டோமே என வேதனையடைந்து வெம்பக்கோட்டை போலீசில் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறினர்.
