அமமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம் தேர்தலில் யாருடன் கூட்டணி? டிடிவி பரபரப்பு பேச்சு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் பேசிய டிடிவி.தினகரன் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அமமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், டிடிவி தினகரனை மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்து, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் அவருக்கு வழங்கியும், 100 நாள் வேலைத்திட்டத்தை மீண்டும் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும், மாநிலங்களின் மீதான நிதி சுமையை ஏற்றும் முடிவை கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுத்துவது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. அது என்றைக்கும் தொடர வேண்டும். தமிழகத்தில் சாதி, மதங்களை, கடவுகளின் பெயரை எந்தவொரு அரசியல் இயக்கமும், எந்தவொரு அமைப்பும் பயன்படுத்தி, இங்கே வாழ்கின்றவர்களிடம் எந்தவொரு குழப்பமும் ஏற்படுத்தி விடக்கூடாது. தமிழகத்தின் பொது அமைதி கெட்டுவிட கூடாது என்பதற்காக தேர்தல் வெற்றி, தோல்வியை தாண்டி செயல்பட்டு கொண்டிருக்கிற இயக்கம் அமமுக. இன்றைக்கு அமமுக இடம் பெறப்போகின்ற கூட்டணி தான், தமிழகத்தில் வெற்றி கூட்டணியாக, ஆட்சி அமைக்கின்ற கூட்டணியாக இருக்கும். யாரிடமும் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் தமிழகத்தின் நலனுக்காக செயல்படக் கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கு அமமுக உறுதியாக துணை நிற்கும்.

இந்த தேர்தலில் நாம் கை காட்டுபவர் தான் தமிழகத்தின் முதல்வராக வர முடியும் என்பது இயற்கை எழுதி இருக்கின்ற தீர்ப்பு. ஏதேதோ செய்திகளை, வதந்திகளை பரப்புவார்கள். எதை பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டும். நமது உயரம் நமக்கு தெரியும். நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு, கூட்டணியில் சீட்டுகளை பெற்று, உறுதியாக அதில் 80 சதவீதத்துக்கு மேல் வெற்றி பெற்று, சட்டமன்றத்திற்கு தமிழக மக்கள் நம்மை அனுப்ப இருக்கிறார்கள்.
கூட்டணி பற்றி எல்லாம் யாரும் எந்த கவலையும் பட வேண்டாம். தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்றெல்லாம் என் கண்களுக்கு தெரியாது. உறுதியாக அமமுக கவுரவமான இடங்களை பெற்று, கூட்டணி ஆட்சி அமைப்போம். அதில் அமமுகவை சேர்ந்தவர்கள் உறுதியாக அமைச்சர்களாக இடம் பெறுவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: