×

வெனிசுலாவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது போல் கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் டிரம்ப்: கடும் எச்சரிக்கை விடுத்த டென்மார்க் பிரதமர்

 

கோபன்ஹேகன்: கிரீன்லாந்து தீவை அமெரிக்கா கைப்பற்றுவது தொடர்பான பேச்சுக்கு டென்மார்க் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதலே டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்கத் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 3ம் தேதி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாகக் கைது செய்து, அந்நாட்டைத் தற்காலிகமாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் கிரீன்லாந்துக்கான சிறப்புத் தூதராக லூசியானா கவர்னர் ஜெஃப் லேண்ட்ரியை டிரம்ப் நியமித்திருந்தார்.

வெனிசுலாவைத் தொடர்ந்து கிரீன்லாந்தையும் அமெரிக்கா ஆக்கிரமிக்கக்கூடும் என்ற அச்சம் டென்மார்க் மக்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி பத்திரிகை ஒன்றுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், ‘எங்களுக்கு கிரீன்லாந்து கண்டிப்பாகத் தேவை, பாதுகாப்பு காரணங்களுக்காக அதை எடுத்துக்கொள்வோம்’ எனக் கூறியிருந்தார். இதற்கிடையே டிரம்ப் உதவியாளரின் மனைவி கேட்டி மில்லர், கிரீன்லாந்து வரைபடத்தின் மீது அமெரிக்கக் கொடியைப் போர்த்தியது போன்ற படத்தை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டு ‘விரைவில்’ எனக் குறிப்பிட்டிருந்தது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன், ‘அமெரிக்காவின் இந்தச் செயல் அபத்தமானது மற்றும் அர்த்தமற்றது. கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; நேச நாடாகத் திகழும் எங்களை மிரட்டுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், கிரீன்லாந்து ஏற்கனவே நேட்டோ அமைப்பில் உள்ளதால், அமெரிக்காவிற்குப் போதுமான பாதுகாப்பு உள்ளது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags : TRUMP ,GREENLAND ,VENEZUELA ,DENMARK ,COPENHAGEN ,Prime Minister of Denmark ,US ,Donald Trump ,President ,
× RELATED ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்