காத்மாண்டு: இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நேபாளத்தின் சில பகுதிகளில் மதவாத வன்முறை அதிகரித்துள்ளது. இதையடுத்து பர்சா மாவட்ட நிர்வாகம், பீகாரில் உள்ள ரக்சௌல் மாவட்டத்திற்கு அருகிலுள்ள பிர்கஞ்ச் நகரில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழ்நிலைக்கு மத்தியில், இந்தியா தனது எல்லைகளை முழுமையாக மூடியுள்ளது. அவசர சேவைகளைத் தவிர அனைத்து எல்லை தாண்டிய நடமாட்டங்களையும் கட்டுப்படுத்தியுள்ளது.
தனுஷா மாவட்டத்தின் கமலா நகராட்சியைச் சேர்ந்த ஹைதர் அன்சாரி மற்றும் அமானத் அன்சாரி என அடையாளம் காணப்பட்ட இரண்டு முஸ்லிம் இளைஞர்கள், சில மத சமூகங்களை அவமதிக்கும் கருத்துக்களைக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த காணொளி விரைவில் தனுஷா மற்றும் பர்சா மாவட்டங்களில் வகுப்புவாத பதற்றத்திற்கு ஒரு தூண்டுதலாக மாறியது.
அந்தக் காணொளி வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, உள்ளூர்வாசிகள் விரைவில் அந்த இருவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே, கமலாவின் சகுவா மாரன் பகுதியில் ஒரு மசூதி சேதப்படுத்தப்பட்டது, இது வகுப்புவாத பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
போராட்டங்களின் போது, இந்து அமைப்புகள் தங்கள் தெய்வங்களுக்கு எதிராக இழிவான கருத்துக்கள் கூறப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதனை அடுத்து ஆர்ப்பாட்டம் விரைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியும், உள்ளூர் காவல் நிலையத்தை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் ஏழு போலீசார் காயமடைந்துள்ளனர்.
நேபாளத்தில் நிலைமை மோசமடைந்து வருவதால், அங்கு பணிபுரியும் பல இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். வன்முறை காரணமாக பிர்ஜஞ்சில் உள்ள அனைத்து கடைகளும் சந்தைகளும் முற்றிலும் மூடப்பட்டிருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் அங்கு தங்கியிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
