வாஷிங்டன்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கெஞ்சிய விபரங்கள் தற்போது ஆவணங்கள் மூலம் அம்பலமாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள், விமான தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் துல்லியத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.
இந்தியாவின் இந்த ருத்ரதாண்டவத்தைக் கண்டு அஞ்சிய பாகிஸ்தான், மே 10ம் தேதி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டாலும், இந்தியா தனது நடவடிக்கையை முழுமையாகக் கைவிடாமல் தற்காலிகமாகவே நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலை எப்படியாவது நிறுத்தக் கோரி கடந்த 2025ம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு அமெரிக்காவில் ரகசியமாகப் பெருமளவில் செலவு செய்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதற்காகச் சுமார் 5 மில்லியன் டாலர் செலவில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மற்றும் எம்பிக்களுடன் 50க்கும் மேற்பட்ட சந்திப்புகளைப் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் செலவை விட 3 மடங்கு அதிக பணத்தை வாரி இறைத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் இடையிலான சந்திப்பை நடத்தியுள்ளனர். ‘இந்தியாவின் தாக்குதலை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்’ என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கதறியது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், ‘எந்த மூன்றாம் நாட்டின் தலையீடும் எங்களுக்குத் தேவையில்லை’ என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
