×

புதிய இடைக்கால அதிபரானார் டெல்சி ரோட்ரிக்ஸ்; வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம்

 

எதிர்ப்பாளர்களை வேட்டையாட ராணுவத்திற்கு அதிகாரம்

காரகாஸ்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் புதிய இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுக் கொண்டார். அதேநேரம் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்ப்பாளர்களை வேட்டையாட ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோரை கடந்த 3ம் தேதி அமெரிக்க ராணுவம் அதிரடியாகச் சுற்றி வளைத்து சிறைபிடித்தது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதத் தடை மீறல் வழக்கு விசாரணைக்காக அவர்கள் நியூயார்க் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தத் திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து காரகாஸில் உள்ள நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார். இவ்விழாவில் பங்கேற்ற மதுரோவின் மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா, புதிய தலைவருக்கு தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார். பதவியேற்பு விழாவில் பேசிய டெல்சி, மதுரோ கைது செய்யப்பட்டதை ‘சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஆள்கடத்தல்’ எனத் கடுமையாக விமர்சித்தார். இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் என்றும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்புக்கான திட்டங்களை வகுக்க அமெரிக்க அரசிற்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள செய்தியில், ‘வெனிசுலாவின் அதிகார மாற்றத்தை தற்போது நாங்களே கையாாள்கிறோம்; எண்ணெய் வளம் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களில் அமெரிக்காவின் முன்னுரிமைகளை ஏற்காவிட்டால் டெல்சி ரோட்ரிக்ஸ் மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும்’ என எச்சரித்துள்ளார். விரைவில் காரகாஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படலாம் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெனிசுலாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவசரச் சட்டத்தைப் புதிய இடைக்கால அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்தச் சட்டம் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. மதுரோ கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரால் கையெழுத்திடப்பட்ட இந்த உத்தரவை, இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இந்த அவசர நிலை அடுத்த 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மற்றும் அதனை ஊக்குவித்தவர்களை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யப் பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் வளம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் ராணுவ அதிகார வரம்பிற்குள் மாற்றப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ போன்றவர்களை ஒடுக்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ‘ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை’ என வெனிசுலா அரசு வர்ணித்துள்ளது. அதேவேளையில், இது உள்நாட்டு அடக்குமுறையை அதிகரிக்கும் செயல் எனச் சர்வதேச பார்வையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிபர் மதுரோவின் வங்கிக் கணக்குகள்
வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய சகாக்களுக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முடக்கி சுவிட்சர்லாந்து அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சுவிட்சர்லாந்து பெடரல் கவுன்சில் நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தடையானது மதுரோ மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 37 நபர்களுக்குப் பொருந்தும் என்றும், அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தச் சொத்து முடக்கம் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தற்போதைய அரசு அதிகாரிகளுக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தாது என்றும் சுவிஸ் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து சுவிஸ் அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘மதுரோ பதவியை இழந்ததே இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணியாகும்; எதிர்காலத்தில் இந்தச் சொத்துக்கள் சட்டவிரோதமானவை என நிரூபிக்கப்பட்டால், அவற்றை வெனிசுலா மக்களுக்கே திருப்பித் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் மகன் ஆவேசம்
வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோரை அமெரிக்க ராணுவம் அதிரடியாகக் கைது செய்து நியூயார்க் நகருக்குக் கொண்டு சென்றது. அங்குள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட மதுரோ, ‘காரகாஸில் உள்ள எனது வீட்டிலிருந்து நான் கடத்தி வரப்பட்டேன்’ என்று நீதிபதியிடம் கூறியதுடன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து ‘குற்றவாளி அல்ல’ என்று வாதாடினார். இந்நிலையில், காரகாஸில் உள்ள நாடாளுமன்றத்தில் மதுரோவின் மகனும் எம்பி-யுமான நிக்கோலஸ் மதுரோ குவேரா நேற்று ஆவேச உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், ‘ஓர் நாட்டின் தலைவரை ஆள்கடத்தல் செய்வது உலக அரசியல் ஸ்திரத்தன்மைக்கே விடப்பட்ட நேரடி மிரட்டல்; இது நாடுகளின் இறையாண்மைக்கு எதிரான செயல்’ என்று சாடினார். மேலும், ‘எங்கள் குடும்பம் விற்பனைக்குரிய பண்டம் அல்ல என்பதால் பழிவாங்கப்படுகிறோம்; சர்வதேச சமூகம் எனது பெற்றோர் தாயகம் திரும்ப உதவுவது தார்மீக மற்றும் சட்டரீதியான கடமை’ என்றும் வலியுறுத்தினார். மேலும், ‘கட்சியில் உள்ள துரோகிகள் யார் என்பதை வரலாறு காட்டும்’ என்று எச்சரித்த அவர், இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸிற்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும், பெற்றோரை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் சூளுரைத்தார்.

Tags : Delcy Rodriguez ,Venezuela ,Caracas ,President ,Nicolas Maduro ,US military ,
× RELATED அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி...