வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியால் நாட்டின் கருவூலம் நிரம்பி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வரி வசூல் மூலம் அமெரிக்காவிற்கு 600 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.50.40 லட்சம் கோடிக்கும்) அதிகமான வருவாய் கிடைத்துள்ளது; இதனால் நாடு முன்னெப்பொழுதையும் விட நிதி ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் பலம் அடைந்துள்ளது. இந்தச் சாதனை விபரங்களை போலி செய்தி ஊடகங்கள் வேண்டுமென்றே மறைக்கின்றன; எனது வரி விதிப்பு முறை தொடர்பான முக்கிய வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதன் தீர்ப்பை திசை திருப்பவே ஊடகங்கள் இவ்வாறு இருட்டடிப்பு செய்கின்றன’ என்றும் டிரம்ப் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டிரம்ப் இவ்வாறு கூறினாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் அதற்கு நேர்மாறான தகவல்களைத் தருகின்றன. அமெரிக்கச் சுங்கத்துறை தரவுகளின்படி, 2025ம் நிதியாண்டில் வரி வருவாய் 216.7 பில்லியன் டாலராக (சுமார் ரூ.18.20 லட்சம் கோடி) மட்டுமே இருந்துள்ளது. அதேபோல், 2026ம் ஆண்டில் இது 207.5 பில்லியன் டாலராக (சுமார் ரூ.17.43 லட்சம் கோடி) மட்டுமே இருக்கும் என வரி அறக்கட்டளை கணித்துள்ளது. டிரம்ப் குறிப்பிடும் 600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.50.40 லட்சம் கோடி) என்பது, நடுத்தர மக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள ஈவுத்தொகைத் திட்டத்தின் உத்தேச மதிப்பீடாக இருக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
உண்மையில், இந்த வரி உயர்வால் அமெரிக்கக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டுக்குச் சராசரியாக 1,200 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) கூடுதல் செலவைச் சுமக்க வேண்டியுள்ளது என்றும், இது வெளிநாட்டு நிறுவனங்களை விட அமெரிக்க நுகர்வோரையே அதிகம் பாதிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
