மும்பை: மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை நடிகை ஷ்ரத்தா கபூர் அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர், ‘ஈதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் இப்படத்திற்காக நடனக்காட்சி ஒன்றில் நடித்தபோது அவருக்கு இடது காலில் தசை கிழிவு மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 73 வயதான தனது தந்தை சக்தி கபூருடன் ஷ்ரத்தா கபூர் வந்திருந்தார். இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். காரில் இருந்து இறங்கிய தனது தந்தையை ஷ்ரத்தா கபூர் மிகவும் அக்கறையுடன் தாங்கிப்பிடித்துக் கொண்டு படியேறிச் சென்றார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவர்களை வீடியோ எடுத்தனர். இதனால் பதற்றமடைந்த ஷ்ரத்தா கபூர், ‘தயவு செய்து வீடியோ எடுக்காதீர்கள், வேண்டாம்’ என்று சைகை காட்டி உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே சக்தி கபூரின் சட்டையில் ரத்தக் கறை போன்ற சிவப்பு அடையாளம் இருந்ததாகக் கூறி இணையதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. மருத்துவமனைக்கு வந்ததற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ரசிகர்கள் தங்கள் பிரார்த்தனைகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
