×

பாலியல் குற்றவாளி சாமியாருக்கு 15வது முறையாக பரோல்: அரியானா அரசு சலுகை காட்டுவதாக புகார்

 

ரோத்தக்: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலுள்ள சாமியார் ராம் ரஹிமுக்கு 15வது முறையாகப் பரோல் வழங்கி ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் என்பவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும் பெற்றவர் ஆவார். ரோத்தக் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவருக்கு, அரியானா அரசு நேற்று (ஜன. 4) மீண்டும் 40 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.

வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள ஆசிரமத்தின் 2வது தலைவர் ஷா சத்நாம் சிங்கின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்பேரில் இன்று (திங்கள்கிழமை) அவர் சிறையிலிருந்து வெளியே வரவுள்ளார். இம்முறை அவர் வழக்கமாகச் செல்லும் உத்தரப் பிரதேசத்தின் பாக்மத் ஆசிரமத்திற்குச் செல்லாமல், அரியானாவின் சிர்ஸாவில் உள்ள தலைமை ஆசிரமத்தில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 15 முறை பரோலில் வெளிவந்துள்ள இவர், மொத்தம் 405 நாட்கள் சிறைக்கு வெளியே இருந்துள்ளார். சிறை விதிகளின்படி பொதுக்கூட்டங்களை நடத்த இவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், காணொளி வாயிலாகத் தனது பக்தர்களுடன் உரையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற ஒருவருக்குத் தொடர்ந்து சலுகைகள் வழங்கப்படுவது குறித்துப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், எதிர்க்கட்சியினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ‘மாநில அரசு அவருக்குத் தொடர்ந்து பரோல் வழங்குவது ஏன்?’ என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Haryana government ,Rohtak ,Ram Rahim ,Gurmeet Ram Rahim Singh ,Dera Sacha Sauda ,Haryana ,
× RELATED மசூதி சேதப்படுத்தப்பட்டதால்...