மும்பை: பிரபல சின்னத்திரை நட்சத்திர தம்பதிகளான ஜெய் பானுசாலி மற்றும் மஹி விஜ் ஆகியோர் தங்கள் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்தித் தொலைக்காட்சி உலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் ஜெய் பானுசாலி மற்றும் மஹி விஜ். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு நவம்பரில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் பரவி வந்தன. மேலும் விவாகரத்துக்காக மஹி விஜ், 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டதாகவும் வதந்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருவரும் தாங்கள் பிரிவதை நேற்று சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடனும், முதிர்ச்சியுடனும் பிரியும் முடிவை எடுத்துள்ளோம். எங்கள் பிரிவில் யாரும் வில்லன் இல்லை; நாடகத்தன்மையை விட அமைதியை விரும்பியே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
எங்கள் குழந்தைகள் தாரா, ராஜ்வீர் மற்றும் குஷி ஆகியோரின் நலனே எங்களுக்கு முக்கியம். அவர்களுக்காக நாங்கள் எப்போதும் சிறந்த பெற்றோராகவும், நண்பர்களாகவும் இருப்போம்’ என்று தெரிவித்துள்ளனர். 14 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை முறிந்து போனது அவர்களது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
