×

ஆய்வகத்தில் பிளேட்லெட்டுகளை தயாரிக்க ஊசி மூலம் ஆட்டின் ரத்தத்தை உறிஞ்சி விற்பனை செய்த 2 பேர் கைது: 130 பாக்கெட் ரத்தம் பறிமுதல்

 

திருமலை: ஆய்வகத்தில் பிளேட்லெட்டுகளை தயாரிக்க ஊசி மூலம் ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்த மட்டன் கடைக்காரர் உள்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜ்கிரியில் உள்ள சத்தியநாராயணா காலனியில் சிக்கன் மற்றும் மட்டன் கடை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை ஆடுகளிடமிருந்து ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். சோதனையில் மனிதர்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கும் 130 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் ரத்தம் இருந்தது. அதனை எடுத்து சோதித்தபோது ஆட்டின் ரத்தம் என தெரிந்தது.

இதையடுத்து கடையில் நடத்திய விசாரணையில், ஆடுகளை கொல்லாமல் அதன் உடலில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை மட்டும் உறிஞ்சி எடுத்து ரத்த ஆய்வகத்திற்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் சுந்தர்சோனு மற்றும் ஊழியர் அகில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 130 ரத்த பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சுந்தர்சோனு தனது கடையில் இறைச்சிக்காக வைத்துள்ள ஆடுகளில் இருந்து தினமும் ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து பிளாஸ்டிக் பாக்கெட்டில் சேகரித்துள்ளார். இதை கச்சேகுடாவில் உள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து மருத்துவ ஆய்வகங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

அந்த ரத்தம் பிளேட்லெட்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மருத்துவர்கள் அனுமதியின்றி, மேற்பார்வையின்றி கட்டுப்பாடற்ற முறையில் ரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுத்து விற்பனை செய்கிறார். ரத்தம் உறிஞ்சப்படும் ஆடுகள், அன்று மாலைக்குள் தானாகவே இறந்து விடுகிறது. அதற்கு பிறகு ஆடுகளை இறைச்சியாக விற்பனை செய்து வந்துள்ளார் என்றனர்.

Tags : Tirumala ,Satyanarayana Colony ,Metchal Malkajgiri, Telangana… ,
× RELATED மசூதி சேதப்படுத்தப்பட்டதால்...