×

தென்கொரிய ‘லிவ்இன்’ காதலனை குத்திக்கொன்ற மணிப்பூர் காதலி: போதையில் வாக்குவாதம் முற்றியதால் விபரீதம்

 

நொய்டா: நொய்டாவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தென்கொரிய காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த மணிப்பூர் இளம்பெண் கைது செய்யப்பட்டார். தென்கொரிய நாட்டைச் சேர்ந்த டக் ஹீ யூ (47) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரும் மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான லுஞ்சியானா பமை என்ற பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக கிரேட்டர் நொய்டா செக்டர் 150 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் செய்து கொள்ளாமலே (லிவ்-இன்) ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லுஞ்சியானா, கத்தியால் காதலனின் மார்பில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை, லுஞ்சியானாவே ஓட்டுநர் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த நாலெட்ஜ் பார்க் போலீசார் லுஞ்சியானாவைக் கைது செய்தனர்.

விசாரணையில், ‘அவர் அடிக்கடி குடித்துவிட்டுத் தன்னைத் துன்புறுத்தியதாகவும், தற்காப்பிற்காகவே கத்தியால் குத்தியதாகவும், அவரைக் கொலை செய்யும் நோக்கம் தனக்கு இல்லை’ என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தென்கொரியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ெதாடர்ந்து அப்பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Noida ,Manipur ,Duk Hee Yoo ,India ,
× RELATED மசூதி சேதப்படுத்தப்பட்டதால்...