இந்தியாவில் சரியும் வேளாண் பரப்பு முன்னேற்றத்திற்கு தடையாக மாறும்: முன்னோடி விவசாயிகள் ஆதங்கம்

 

விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்றார் தேசப்பிதா மகாத்மாகாந்தி. உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றும் மனிதகுலத்திற்கான அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமானது. இதில் முதலிடத்தில் இருப்பது உணவு. உயிர்வளர்க்கும் இந்த உணவை நமக்கு உற்பத்தி செய்து கொடுப்பவர்கள் விவசாயிகள். உலகளவில் ஒரு தலைசிறந்த விவசாய நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு உண்டு. இங்குள்ள விவசாயிகள் இந்திய பொருளாதாரத்தின் அடித்தளமாக திகழ்வதோடு கிராமப்புற செழிப்புக்கும் முக்கிய காரணமாக உள்ளனர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்த வகையில் இந்தியாவில் 50 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும், அது சார்ந்த உபதொழில்களும் இருந்து வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்தநாளில் தேசிய விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இப்படி பொறுப்புள்ள பெருமைமிகு விவசாயிகளை போற்றி மகிழ்ந்து விவசாயத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 23ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகளவில் தற்போதைய சூழலில் வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 2 சதவீதம் மக்களும், ஜப்பானில் 5 சதவீதம் மக்களும் விவசாயம் செய்து வருகின்றனர். வளம் குறைந்த நாடான இஸ்ரேலில் 10 சதவீத மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் 60 சதவீதம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் பன்னெடுங்காலமாக 70 சதவீதம் மக்கள் விவசாயிகளாக இருந்த இந்தியா, அதில் தனித்துவம் பெற்ற நாடாக இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு சமூககாரணங்கள், கட்டமைப்புகளால் வேளாண்நிலங்களின் பரப்பு குறைந்து விவசாயிகளின் எண்ணிக்கையும் வேகமாக சரிந்து வருகிறது. இது எதிர்கால இந்தியாவிற்கு மிகவும் அபத்தமானது. எனவே தேசிய விவசாயிகள் தினத்தில் இதற்குரிய முன்னெடுப்புகளை முன்னெடுத்து, விவசாயத்தை தழைக்கச் செய்வது அனைவருக்குமான முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்கின்றனர் முன்னோடி விவசாயிகள்.

இதுகுறித்து முன்னோடி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: விவசாயத்திற்கு இன்றைய தலையாய பிரச்னைகளில் முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருப்பது விளைநிலங்களின் அழிப்பு. இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம், புதிய தொழிற்சாலைகள் உருவாக்கம், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் விளைநிலங்கள் எல்லாம் கட்டாந்தரைகளாக மாறிவருகிறது.

இதனால் வேளாண் பரப்பளவு வேகமாக குறைந்து வருகிறது. உதாரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 53.2 சதவீதமாக இருந்த வேளாண் நிலங்களின் பரப்பளவு தற்போது 37.05 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியா தற்போது தன்னை ஒரு வல்லரசு நாடாகவும், பொருளாதாரத்தில் மிகப்பெரும் வளர்ச்சி பெற்ற நாடாகவும் பிரகடனப்படுத்தி வருகிறது. இது இந்தியர்கள் என்ற முறையில் நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

அதேநேரத்தில் உலகளவில் உணவின்றி பட்டினியால் தவிப்பவர்கள் 2.9 கோடி பேர். இவர்களில் 65 லட்சம் மக்கள் இந்தியாவில் தான் இருக்கின்றனர். இதில் 40 சதவீதம் குழந்தைகளுக்கும் போதிய உணவு கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்ற புள்ளிவிபரங்களும் வேதனைக்குரியது. விவசாய நிலப்பரப்பு குறைந்து போதிய உணவு உற்பத்தி இல்லாததும் இதற்கொரு முக்கியகாரணம். விவசாய நிலப்பரப்பு குறைந்து வருவது போல், விவசாயிகளின் எண்ணிக்கையும் வேகமாக சரிந்து வருகிறது. இந்தியாவில் 1951ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 72 சதவீதம் பேர். விவசாயிகளாக இருந்தனர். ஆனால் தற்ேபாது 50 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே விவசாயிகள் உள்ளனர்.

இதில் தற்போதைய விவசாயிகள் அனைவரும் 50 வயதை கடந்தவர்களாக உள்ளனர். அவர்களின் குழந்தைகளில் பெரும்பாலானோர், தந்தை வழியில் விவசாயத்தை தொடராமல் மாற்றுப்பணிகளுக்கு சென்று விட்டனர். இதனால் இந்த விவசாயிகளுக்கு பிறகு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பசிபோக்கும் பொறுப்பு மிக்க விவசாயிகள் கிடைப்பார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இது நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் அபத்தமாக மாறிவிடும். எனவே இந்தநாளில் விளைநிலங்களையும், விவசாயிகளையும் போற்றி பாதுகாப்பதற்கான விழிப்புணர்வும், உறுதியும் மிகவும் அவசியம். அதேபோல் நாம் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் முன்ேனாடி விவசாயிகள் காட்டும் பாதையில் நம்மால் இயன்ற அளவு வேளாண் உற்பத்தியிலும் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

* 80% பேருக்கு பதற்றம்

ஒரே நேரத்தில் நல்லமழை, நல்ல மகசூல், சாதகமான விலையை பெறுவது என்பது கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கைக்கு எட்டாத ஒன்றாகவே உள்ளது. விளைச்சலை பொறுத்து விவசாயிகளின் வருவாய் குறைவாகவோ அல்லது நேர்மறையாகவோ இருக்கும். உபகரணங்களை பயன்படுத்தி குறைந்த உற்பத்தி செலவுகள் என்பதும் பெரிய விவசாயிகளுக்கே சாதகமாக உள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாக சமீபஆண்டுகளாக விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு பணியாட்கள் கிடைப்பதும் பெரும்பாடாகி வருகிறது. அதுமட்டுமன்றி அனைத்து நிலைகளிலும் இடைத்தரகர்களை கடந்தே சந்தைக்கு பொருட்களை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதுபோன்ற பல்வேறு சூழல்களால் 80சதவீதம் விவசாயிகள் பதற்றம் நிறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர் என்பதும் விவசாய மேம்பாட்டு சங்கங்களின் குமுறல்.

* 5 ஆண்டுகளில் மட்டும் 28,572 தற்கொலைகள்

வேளாண்பரப்பு சரிந்து விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம்ஆண்டு வரையிலான 5ஆண்டுகளில் மட்டும் 28ஆயிரத்து 572விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 2017ல் 5,955 விவசாயிகளும், 2018ல் 5,763 விவசாயிகளும், 2019ல் 5,957 விவசாயிகளும், 2020ல் 5,597 விவசாயிகளும், 2021ல் 5,318 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர் என்பது ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணகாப்பகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. விவசாயிகளின் வருமானம் 30 சதவீதம் உயர்ந்த நிலையில் கடன் என்பது 58 சதவீதமாக உயர்ந்திருப்பதே இந்த அவலத்திற்கு காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

Related Stories: