திருவள்ளூர், ஜன.3: திருவள்ளூரில், கார் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் அடுத்து பெரியகுப்பத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் அலுவகம் உள்ளது. இங்கு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளராக தமிழரசி (47) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை திருவள்ளூர் நகராட்சி அருகே சென்னை- திருப்பதி சாலையில் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டாரஸ் லாரி, கார் மீது மோதிய விபத்துக்குள்ளானது. இதில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து, திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன், வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றார்.
