திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா

திருத்தணி, டிச.31: திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடைபெறும் திருப்படி திருவிழாவையொட்டி, நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மலைக்கோயிலுக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் நாளை திருப்படி திருவிழா மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய கோயிலுக்கு வருகை தர உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 24 மணி நேரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நடை திறந்திருக்கும். இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏராளமான வாகனங்கள் மலைப்பாதை வழியாக மலைக்கு வருவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கிடையில், திருப்படி திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு பக்தர்களுக்கு வசதி உறுதிப்படுத்தும் வகையில் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு (செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை) மலை கோயிலுக்கு செல்ல ஆட்டோக்களுக்கு தடை விதித்து திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இட வசதிக்கு ஏற்ப கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலை அடிவாரத்தில் இருந்து மலைக் கோயில் படா செட்டிகுளம் வரை கோயில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: