புழல், ஜன.3: புழல் சிறையில் கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்களின் நலன் கருதி, சிறை வளாகத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புழலில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளது. இதில், கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி, வழிப்பறி, கற்பழிப்பு, போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 200 பெண்கள் உள்பட 4,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களை பார்க்க அரசு வேலை நாட்களில் தினசரி 300க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். இவர்கள் வந்து செல்லும்போதும், குறிப்பாக பெண்கள், சிறை வளாகத்தில் மற்றும் வெளியிலே கழிப்பிட வசதியின்றியும், குறிப்பாக சிறுநீர் கழிக்கக்கூட இடவசதியின்றி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சாலையின் ஓரங்களிலும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பின்புறங்களிலும் சிறுநீர் மற்றும் மலம் கழித்து வருகின்றனர். இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதால், சாலையில் செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து சிறை வளாகத்தில் அல்லது சிறையின் சுற்றுசுவர் அருகில் கழிப்பிடம் கட்டிடம் கட்டி, சிறைக்கு வருகை தரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
