சென்னை: மெரினா கடற்கரையில் உணவுபொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர வேறு எந்த கடைகளையும் அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு டிசம்பர் 22ம் தேதி கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர். இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சி தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுரேஷ்குமார் ஆகியோர் ஆஜராகி, கடைகள் தொடர்பான வரைபடத்தை தாக்கல் செய்தனர். வரைபடத்தை பார்த்த நீதிபதிகள், உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை மெரினா கடற்கரை. இதன் ஒரு பகுதி நீலக்கொடி சான்று பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலக்கொடி பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கடைகள் வைக்க அனுமதியில்லை.
மேலும் இரண்டு பகுதிகளை நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள சுமார் 35 ஏக்கர் இடத்தை மாநகராட்சி சுத்தம் செய்துள்ளது. இந்த பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும். உழைப்பாளர் சிலையின் பின்புறம் ஏராளமான நிரந்தர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட கடற்கரை வரை இந்த கடைகள் உள்ளன.
அவற்றை அகற்ற வேண்டும்.உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை. சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள் மறைக்கின்றன. கடற்கரையில் மட்டும் 1980 கடைகள் இருப்பதாக டிரோன் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் எண்ணி பார்த்தபோது 1,417 கடைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த 1417 கடைகளை கடற்கரையில் அமைப்பது என்று மாநகராட்சி அறிக்கையுடன் வரைபடத்தையும் தாக்கல் செய்துள்ளது.
இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும். உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற கடைகள் தேவையில்லை. கடற்கரை மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு இடம்தானே தவிர கடற்கரை ஷாப்பிங் மால் அல்ல.
எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரையை ரசிக்க கடைகள் இடையூறாக இல்லை என்பதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
