சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமையை குற்றம்சாட்டி ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 24 மணி நேரமும் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். ‘தமிழக காங்கிரஸ் அழிவின் பாதைக்கு செல்கிறது. ராகுல் காந்தியின் அரசியலுக்கு நேர் எதிராக தமிழக காங்கிரஸ் செல்கிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டிருப்பது கட்சிக்குள்ளான கோஷ்டி பூசலை வெளிச்சத்துக் கொண்டு வந்துள்ளது.
ஜோதிமணியின் இந்த பதிவு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது பதிவில் “தமிழ்நாடு காங்கிரசில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடரும் உட்கட்சி பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது. இதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும்.
எந்த அரசியல் கட்சியும் தனது நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி முகவர் பட்டியல் கொடுக்க விடாமல் முடக்க நினைக்காது. ஆனால் காங்கிரசில் அது நடக்கிறது. கொள்கை நிலைப்பாடுகள், அரசியல் செயல்பாடுகள் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடக்கிறது. மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் தவறான காரணங்களுக்காக கட்சி செய்திகளில் அடிபடுகிறது’’ என்று கூறியுள்ளார்.
ஜோதிமணியின் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிவை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கரூர் தேர்தல் படிவம், முகவர் நியமனம் உள்ளிட்டவற்றில் பிரச்னை இருந்து வந்தது உண்மை தான். சகோதரி ஜோதிமணியின் புகார் குறித்து ஏற்கனவே மேலிடத்திற்கு தெரியப்படுத்தி உள்ளேன்.
மேலிடத்தில் இருந்து இன்னும் பதில் வராத நிலையில் ஜோதிமணி பதிவிட்டது ஆச்சரியமளிக்கிறது. அவர், கட்சியின் ஒரு முக்கிய தூண். சில நேரங்களில் கோபத்திலோ அல்லது சங்கடத்திலோ இதுபோன்ற கருத்துகளைப் பதிவிட நேரிடலாம். ஜோதிமணி எதற்காக இதுபோன்ற ஒரு டிவிட்டை பொதுவெளியில் பதிவிட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
குறைகள் இருந்தால் என்னிடம் அல்லது கட்சி மேலிடப் பொறுப்பாளரிடம் நேரடியாகப் பேசியிருக்கலாம்.
அவருடைய மாவட்டத்தில் உட்கட்சி பிரச்னை இருக்கிறது. ஒரு மாவட்ட தலைவர் தவறாக பேசினார். இந்த பிரச்னைக்கு தீர்வும் கண்டிருக்கிறேன். அழிவின் பாதையில் காங்கிரஸ் இருக்கிறது என எப்படி சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் பேசி குறைகளை சரி செய்யத் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
