சென்னை: தமிழகம் முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 15.56 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் இணைந்து, பிரத்யேக அமலாக்க குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் மூலம், தெருவோர வியாபாரிகள் முதல் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்ளில் ஆய்வுசெய்து வருகின்றன.
மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளிலும், காவல்துறையின் ஆதரவுடன் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த அமலாக்க நடவடிக்கையின்போது, மாநிலம் முழுவதும் மொத்தம் 9,248 கடைகளில் ஆய்வுகளும் சோதனைகளும் நடத்தப்பட்டன. இதில் 2,553 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 15.56 டன் தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.12,50,200 அபராதமாக விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்த 2019ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 290க்கும் மேற்பட்ட சட்டவிரோத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 13 தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த தடையை தவறாமல் பின்பற்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
