அவனியாபுரம்: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உடல் தகுதியை பரிசோதித்து தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி மதுரை அவனியாபுரத்தில் நேற்று தொடங்கியது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடக்கும். நடப்பாண்டில் தைப்பொங்கல் திருநாளான ஜன. 15ம் தேதி அவனியாபுரம், 16ம் தேதி பாலமேடு, அலங்காநல்லூரில் 17ம் தேதி ஆகிய நாட்களில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
மதுரை மாவட்டத்தில். அவனியாபுரம் அரசு கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதிக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில், 3 முதல் 10 வயதுக்குட்பட்ட காளைகள் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், காளைகளின் கண்கள், கொம்பு, திமில், பற்கள் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டன. 4 அடி உயரத்துக்கு குறையாமல் இருந்த காளைகளுக்கு மட்டும் தகுதிச்சான்றுகள் வழங்கப்பட்டன. அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம், பெருங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகளுக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. சோதனைகள் வரும் 12ம் தேதி வரை நடைபெறும். ஜல்லிக்கட்டு தினத்தன்று காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
அவனியாபுரத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள பிற கால்நடை மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்யலாம். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச்சான்றிதழ் பெற வரும்போது, காளையுடன் உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருக்கும் புகைப்படம், ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வந்தவர்களின் காளைகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டன. காளைகளை முறையாக பரிசோதனை செய்த பிறகே தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை பங்கேற்க செய்யலாம் என கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராம்குமார் தெரிவித்தார்.
