படகில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்

கடலூர், டிச. 30: படகில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜாக்கி, ராஜா, மகி, பன்னீர்செல்வம், மணி ஆகியோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வழக்கம்போல இவர்கள் மீன்பிடிப்பதற்காக தேவனாம்பட்டினத்தில் இருந்து பைபர் படகில் கடலுக்கு சென்றனர். கடலில் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சென்று மீன் பிடித்து கொண்டிருந்த போது, இவர்களின் படகு திடீரென பழுதாகி உள்ளது. இதனால் செய்வதறியாமல் மீனவர்கள் தத்தளித்தனர். நீண்ட நேரம் போராடியும் படகு சரி செய்யப்பட முடியாத நிலையில் கரைக்கு திரும்ப வருவதில் சிக்கல் ஆனது.

இதையடுத்து இவர்களது படகு அருகில் சென்ற மற்றொரு படகில் இருந்த மீனவர்களை உதவிக்கு கூச்சலிட்டு அழைத்துள்ளனர். பின்னர் அவர்களது உதவியுடன் கரைக்கு திரும்புவதற்கு வழி காணப்பட்டது. இதற்கிடையே தேவனாம்பட்டினம் மீனவர்களின் படகு பழுதாகி மீனவர்கள் தத்தளித்தது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கரைப்பகுதிக்கு சென்ற தாசில்தார் மகேஷ் மற்றும் மின்வளத் துறையினர் பாதுகாப்பாக கடலில் தத்தளித்த மீனவர்களை கரைக்கு வருவது குறித்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் உதவியுடன் அவர்கள் கரைக்கு திரும்பினார். இச்சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: