ஆரணி, டிச.31: ஆரணியில் உள்ள இரும்பு கடையில் தானாக நகர்ந்த லாரியை நிறுத்த முயன்ற தொழிலாளி நசுங்கி பலியானார். இந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மேட்டுகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்(65). இவர், ஆரணி-தச்சூர் செல்லும் சாலை கொசப்பாளையம் பகுதியில் உள்ள இரும்பு கடையில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா, இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சிவலிங்கம் வழக்கம்போல் நேற்று காலை வீட்டில் இருந்து ஆரணிக்கு வந்து இரும்பு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஏற்கனவே கடைக்கு முன்பு ஒரு லாரியில் பொருட்களை ஏற்றி நிறுத்தி வைத்திருந்தனர். அதேகடையின் உள்ளே மற்றொரு லாரியில் இரும்பு பொருட்களை ஏற்றிவிட்டு, டிரைவர் லாரியை ஸ்டார்ட் செய்துவிட்டு இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த லாரி திடீரென தானாகவே முன்நோக்கி நகர்ந்துள்ளது.
இதனால், கடையில் வேலை செய்து கொண்டிருந்த சிவலிங்கம், அவருடன் வேலைசெய்து வந்த தொழிலாளிகள், அந்த லாரியின் முன்பகுதிக்கு வந்து தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், லாரியை நிறுத்த முடியாதால், அலறியடித்துக்கொண்டு அனைவரும் தப்பியோடினர். ஆனால், சிவலிங்கம் லாரியின் முன்பகுதியில் நின்று தடுத்தபோது, அந்த லாரி எதிரில் நின்றிருந்த மற்றொரு லாரியின் மீது மோதியது. இதில் லாரிகளுக்கு நடுவில் சிக்கிய சிவலிங்கம் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, சிவலிங்கம் மனைவி விஜயா(51), ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லாரியில் சிக்கி தொழிலாளி நசுங்கி பலியான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி அப்பகுதியினரிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
