கடந்த கால சாதனை, வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்திட திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டும்: பொன்குமார் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: 2025ம் ஆண்டு விடை பெற்று 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்து இருக்கிறது.ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சியின் பல்வேறு சாதனைகளோடு ஆண்டுகள் கடந்துள்ளன. 2021ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை மறு சீரமைப்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்தி, ஓயாது உழைத்து சாதித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியையும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியையும் அரசியல் கடந்து பகுத்துப் பார்த்திட வேண்டும்.

அப்படி பகுத்துப் பார்த்தால் அடுத்து வரும் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான வழி கிடைக்கும். இந்த ஆட்சியின் சாதனைக்கு ஒரு சான்று அதாவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல 2021ல் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 13 லட்சமாக அது இன்றைக்கு 29 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.அப்படியானால் இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்த காரணத்தினால், வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்டங்கள், உயர்த்தப்பட்ட திட்ட பணப்பயன்கள், விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு தான் இன்றைக்கு சுமார் 16 லட்சம் தொழிலாளர்கள் இந்த வாரியத்தில் புதிதாக பதிவு பெற்று உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே 2026ம் ஆண்டு தமிழ்நாட்டினுடைய எதிர்காலத்தை மீண்டும் நிர்ணயிக்கும் ஆண்டாகும். கடந்த கால சாதனைகள், வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்திட வேண்டுமேயானால் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்திட வேண்டும். அதற்கான சிந்தனையை, உறுதியை இந்த புத்தாண்டு தமிழ் மக்களுக்கு வழங்கட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டுகளை விவசாயிகள் தொழிலாளர் கட்சி மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறது.

Related Stories: