மதுரை: தமிழ்நாட்டில் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிவரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை போலீஸ் கமிஷரிடம் புகார் அளிக்கப்பட்டது. திராவிட தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் சந்துரு தலைமையில் அக்கட்சியினர் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் இன்று அளித்துள்ள புகார் மனு: கடந்த 11ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், `பாட்டன் பாரதி கண்ட வந்தே மாதரம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது, அவர் பிராமண கடப்பாரையால் பாழடைந்த திராவிட கோட்டையை இடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இவரது பேச்சு சமூகத்தில் பதற்றம், சட்டம் – ஒழுங்கு பிரச்னை உருவாக காரணமாக உள்ளது. தமிழர்களுக்கு கல்வி, இடஒதுக்கீடு கிடைத்திட அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாகும் வரை பிரசாரம் செய்தவர் தந்தை பெரியார். சீமானின் பேச்சு பெரியாரையும், திராவிடத்தையும் இழிவுபடுத்தும் விதமாகவும், பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதவர்கள் இடையே வன்முறையை தூண்டும் விதமாகவும் உள்ளது. இனம், மொழி, சாதி, சமூகம் அடிப்படையில் விரோதம், வெறுப்பு எண்ணங்களை தீய நோக்கத்துடன் தூண்டி வருவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
