தர்மபுரி, ஜன. 1: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குரூப்-2- 2ஏ முதன்மை தேர்வு மற்றும் 2026ம் ஆண்டிற்கான குரூப்-2- 2ஏ முதல்நிலை தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 5ம் தேதி முதல் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்குகிறது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. மேற்கண்ட தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வுகள், முறையாக நடத்தப்படவுள்ளன. 2025ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் -2ஏ முதல்நிலை தேர்வில், இந்த அலுவலகத்தில் பயின்ற 14 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த அலுவலகத்தில் பள்ளி பாடபுத்தகங்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய, இலவச நூலக வசதி, பயிலக வசதி, வை-பை மற்றும் கணினி உள்பட தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.
எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம், தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04342-288890 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
