மொத்தம் 69, இருப்பது 29… நாகர்கோவிலில் டிராபிக் போலீஸ் பற்றாக்குறை: கூடுதல் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவுக்கு கூடுதல் போலீசார் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நாகர்கோவில் மாநகரில் பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பது போக்குவரத்து நெருக்கடி ஆகும். குறுகிய சாலைகள், அதிக வாகனங்களால் முக்கியமான நாட்களில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் காவல்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை இணைந்து பல கட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும் தீராத தலை வலியாக இருப்பது டிராபிக் ஜாம் ஆகும்.

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை நாட்கள் நெருங்கும் நாட்களில் போக்குவரத்து நெருக்கடியும் அதிகமாகவே இருக்கும். சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த நிலையில், நாளை மறுதினம் 2025ம் ஆண்டு முடிவடைந்து 2026ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, தற்போது பள்ளிகள் அரையாண்டு விடுமுறை என்பதுடன், சபரிமலை சீசன் என்பதாலும் கன்னியாகுமரி உள்பட குமரி
மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் வாகன நெருக்கடி அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் நகரில் ஷாப்பிங் செய்ய கார்களில் தற்போது அதிகளவில் வருகிறார்கள். இதனால் நாகர்கோவில் மாநகரில் நெருக்கடியான நிலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் முகூர்த்த நாட்கள் உள்ளதாலும் பொதுமக்கள் வருகை அதிகரிப்பால் நெருக்கடி ஏற்பட்ட வண்ணம் உள்ளது. மாநகரில் டிராபிக் போலீசார் ஆங்காங்கே நின்று வாகனங்களை ஒழுங்குப்படுத்துகிறார்கள்.முக்கிய சந்திப்புகளில் 4 போலீசார் வரை நின்று வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டி உள்ளது.

இதனால் சில இடங்களில் டிராபிக் போலீசார் இல்லாத நிலை ஏற்படுகிறது. நாகர்கோவில் மாநகர போக்குவரத்து ஒழுங்குபிரிவுக்கு மொத்த எண்ணிக்கை 69 ஆகும். ஆனால் தற்போது 49 பேர் உள்ளனர். இவர்களில் 10 பேர் அதர் டூட்டி என்ற நிலையில் மாற்று பணிகளுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் 39 என்ற எண்ணிக்கை தான் உள்ளது. இதிலும் 10 பேர், வேறு மாவட்டத்துக்கு போக்குவரத்து ஒழுங்கு பணிக்காக அனுப்பி விடப்பட்டுள்ளனர். இதனால் தற்போது 29 பேர் தான் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அபராத விதிப்பு, டாரஸ் லாரிகள் கண்காணிப்பு என சென்று விடுவதால், குறைந்த எண்ணிக்கையிலான டிராபிக் போலீசார் நகருக்குள் காண முடிகிறது. இதனால் வாகனங்கள் சீராக செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே இவற்றை நிவர்த்தி செய்வதற்காக டிராபிக் பிரிவுக்கு கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். மாநகரில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்களை டிராபிக் பிரிவில் நியமிக்க வேண்டும். அது மட்டுமின்றி இதற்கு முக்கிய விஷேச நாட்களில் ஆயுதப்படை போலீசார் நின்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவார்கள். எனவே நெருக்கடியான சமயங்களில் ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: